-
கர்நாடக அரசு காவிரி நீரை மாதாந்திர அடிப்படையில் அல்லாமல் தினசரி திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
காவிரி நதிநீர் பிரச்சனை என்பது கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அதாவது 1970 முதல் இப்பிரச்சனை தொடர்ந்து நீண்டுகொண்டே இருக்கின்றது. தமிழகத்தின் முதல்வராக திரு.கருணாநிதி அவர்கள் தொடங்கி திரு.எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா என பல்வேறு முதல்வர்களும் இப்பிரச்சனை குறித்து கர்நாடக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கர்நாடகத்தின் முதலமைச்சர்களாக இருந்த திரு.தேவராஜ்அர்ஸ் திரு.ராமகிருஷ்ண ஹெக்டே, திரு.குண்டுராவ் போன்றவர்கள் தொடங்கி திரு.எடியூரப்பா, திரு.சித்தராமையா வரை இருமாநிலங்களுக்கு இடையிலான இந்த நதிநீர் தாவா தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதேபோல் மத்திய அரசிலும் திருமதி இந்திரா காந்தி, திரு.ராஜீவ் காந்தி, திரு.நரசிம்ம ராவ், திரு.வி.பி.சிங், திரு.வாஜ்பாய் போன்றவர்கள் தொடங்கி இன்றைக்கு திரு.நரேந்திரமோடி வரை தீர்க்கமுடியாத பிரச்சனையாகவே இது நீண்டுகொண்டிருக்கிறது.
1991 ஜூன் மாதம் காவேரி நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பு வெளியான போதிலும் சரி, 2007-ம் ஆண்டு பிப்ரவரியில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும் சரி, கர்நாடக அரசு அத்தீர்ப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும்,உச்சநீதிமன்றத்தின் உதவியுடன் தமிழக அரசின் நீண்ட சட்டப்போராட்டத்திற்கிடையில் 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டது.அதனையும் கர்நாடக அரசு ஏற்று மதித்து நடக்கவில்லை.
கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் நாள் ஒன்றுக்கு 15ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடவேண்டுமென உத்தரவிட்டது. கர்நாடக அரசு அந்த தீர்ப்பு குறித்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. பின்னர் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் விடவேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனையும் ஏற்காத கர்நாடக அரசு, தங்களுக்கே போதிய தண்ணீர் இல்லை என்றும், விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனைகளால் கர்நாடக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறி மீண்டும் மனு தாக்கல் செய்தது. பின்னர் நாள் ஒன்றிற்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் என்றும், அதன் பின்னர் 2ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் வழக்கம்போலவே செயல்படுத்த மனமில்லாத கர்நாடக அரசு காவிரி நீரை திறந்துவிடவில்லை.
இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ, காவிரி மேலாண்மை வாரியமோ தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்கின்ற மமதைதான். காவிரி நடுவர்மன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி, ஒவ்வொரு ஜுன் மாதம் தொடங்கி மே மாதம் வரையிலான தண்ணீர் ஆண்டுகளில், காவிரி நதியில் பாய்ந்தோடும் நீரின் அளவாக 419 டி.எம்.சி என வரையறுக்கப்பட்டது. இதில் 192 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அதேபோல் கர்நாடகம் 270 டி.எம்.சி தண்ணீரையும், கேரளா 21 டி.எம்.சி தண்ணீரையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.
உதாரணமாக தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய 192 டி.எம்.சி தண்ணீரில் மாதாந்திர அடிப்படையில் கூறியுள்ள கணக்கீட்டின்படி, ஜுன் மாதம் 10, ஜூலை 34, ஆகஸ்ட் 50, செப்டம்பர் 40, அக்டோபர் 22, நவம்பர் 15, டிசம்பர் 8 டி.எம்.சி என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட வேண்டும். ஆனால் இதுவரை எந்த ஆண்டிலும் இந்த கணக்கீட்டின்படி தண்ணீர் திறக்கப்பட்டதில்லை. காரணம் ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு போதிய தண்ணீர் இல்லை எனக் கூறி, கர்நாடகம் மறுத்து வந்துள்ளது.
இதனால் மாதாந்திர அடிப்படையில் என்கிற அளவீட்டிற்கு பதிலாக,தினசரி கர்நாடகத்தில் பெய்யும் மழையின் அளவைக்கொண்டோ அல்லது கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, கபினி, ஹேரங்கி ஆகிய அணைகளில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரின் அளவினைக்கொண்டோ, தண்ணீர் திறந்துவிட மாற்று சிந்தனையிலான அணுகுமுறையினை மத்திய அரசு கடைபிடிக்கவேண்டும்.
அதாவது, நாளொன்றிற்கு 483 கனஅடி அளவிற்கு கர்நாடகாவில் மழை பொழிந்தால், அதில் 270 கனஅடி தண்ணீர் கர்நாடகாவும், 192 கனஅடி தண்ணீரை தமிழகமும், 21 கனஅடி தண்ணீரை கேரளமும், பங்கிட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு மாதாந்திர அடிப்படையிலன்றி தினசரி அடிப்படையில் பங்கிட்டுக்கொள்வதன் மூலம், காவேரி நீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே நீண்ட இழுபறி போராட்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை.
அதேவேளையில், காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகவே இத்திட்டத்தினை செயல்படுத்த முடியும் என்பதால், பங்கீட்டு நீரின் அளவு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, இதன்மீதான மேல்நடவடிக்கை குறித்து மத்திய அரசு சம்மந்தப்பட்ட மாநிலங்களுடன் பேசி, சாத்தியக்கூறுகளை கண்டறிய வேண்டும்.
அதன்பின், தினசரி பங்கீட்டு முறைதான் ஏற்றது என முடிவு செய்தால்,தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து புதிய தீர்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, இந்த மாற்றுசிந்தனை குறித்து மத்திய – மாநில அரசுகள் விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.