-
சங்கரக்கோட்டை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரின் அருகே சங்கரக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5-பேர் உயிரிழந்தும், 10-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாவரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய – பெரிய பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அடிக்கடி ஏற்படும் விபத்துக்களால் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த 2005 முதல் 2016 வரை ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் ஏறக்குறைய 400-க்கும் மேற்பட்டோர் இறந்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
ஆண்டுக்கு ஏறக்குறைய 5 ஆயிரம் கோடி லாபம் ஈட்டியும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் அதன் காலவரையறைக்குள் புதுப்பிக்கப்படுகின்றனவா..? அனைத்து விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா..? விபத்து ஏற்படாமல் அதனை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் விபத்து ஏற்பட்டால் மீட்பு வசதிகள் உள்ளனவா..? என்பவை குறித்து இன்று வரை தெளிவான விவரங்கள் எதுவும் இல்லை. துறைசார்ந்த அதிகாரிகள் இது குறித்த தகவல்களை பொதுமக்களுக்கும் – ஊடகங்களுக்கும் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
இன்று நேரிட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் பூரண குணமடைய வேண்டுவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீட்டையும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமென இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழக அரசினை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.