• வரும் கல்வியாண்டு முதல் தமிழிலும் நீட் தேர்வு எழுத மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதி அனைத்து மாணவர்களின் சமவாய்ப்பை உறுதிபடுத்தும் - டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு

    கடந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த “நீட்“ எனும் மருத்துவத்திற்கான தேசிய நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

    இத்தேர்வானது ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுத வேண்டியிருந்ததால் மருத்துவ படிப்பினை தங்களது கனவாக எண்ணிக்கொண்டிருந்த மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் நம்பிக்கை தகர்ந்ததுடன் அத்தேர்விலும் அவர்களால் வெற்றிபெற இயலவில்லை.

    நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும்,கிராமப்புற மாணவர்களும் அத்தேர்வில் வெற்றிபெரும் வகையில், அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்படவேண்டும் என இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    மேலும், ஏற்கனவே இத்தேர்வை எழுதிய மாணவர்களின் கருத்துப்படி,தேர்வுகளில் கேட்கப்பட்ட பெரும்பான்மையான கேள்விகள் யாவும் சி.பி.எஸ்.இ எனும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்ததால், மாநில மொழிகளில் பயின்ற மாணவர்களால் இத்தேர்வில் அதிகளவில் வெற்றிபெற இயலவில்லை என கூறப்பட்டது.  எனவே இனி வருகின்ற காலங்களில் அந்தந்த மாநில கல்வி முறைகளின் அடிப்படையிலும் கேள்விகளை தேர்வு செய்து கிராமப்புற மாணவர்களும் தேர்ச்சி பெறும்  வகையில் வினாத்தாள் அமைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.                              

    இதனிடையே நீட் தேர்வு ஏற்படுத்திய பல்வேறு பாதிப்புகள் மற்றும் குளறுபடிகளை நீக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இதுகுறித்த தகவல்களை சேகரித்து, அதன் அடிப்படையில் வருகின்ற 2017-18ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்கு நடத்தப்படும் தேசிய நுழைவுத் தேர்வு(நீட்) தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    இந்த அறிவிப்பின் மூலம் மருத்துவம் பயில விரும்பும் இந்தியாவிலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் சம வாய்ப்பு உறுதிபடுத்தப்படும் என்கின்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. சரியான தருணத்தில் எடுக்கப்பட்டுள்ள இம்முடிவினை  இந்திய ஜனநாயக கட்சி சார்பில் வரவேற்கின்றோம்.