-
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள புதிய சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மத்திய அரசிற்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
தமிழகத்திலுள்ள கடலோர மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக கருதப்படுவது மீன்பிடி தொழிலாகும்.
“எல்லை தாண்டினாய்“ என்ற காரணத்தை மட்டும் கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்களின் மீது கொடூர தாக்குதல்கள் நடத்துவதும் – வலைகளை அறுத்து படகுகளை சேதப்படுத்துவதும், மீனவர்களை கைது செய்து சிறைப்படுத்துவதும் போன்ற எண்ணற்ற கொடுமைகளை செய்து இன்றுவரை இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிறுக சிறுக சிதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை ஏறக்குறைய 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தும், 1000-த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் உடலுறுப்புகளை இழந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், வருகின்ற ஜனவரி மாதத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அரசு கடல்சார் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரவுள்ளது என்ற செய்தியானது மீனவர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
1979–ம் ஆண்டு இலங்கை அரசு கொண்டுவந்த வெளிநாட்டு படகுகள் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்து நிறைவேற்றப்பட்டால், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்திய மீனவர்களின் படகுகளை கைப்பற்றுவதுடன், அவற்றை விடுவிக்க ஒரு படகிற்கு 30 லட்சம் முதல் 17 கோடி வரை அபராதம் விதிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது,
இந்திய நாட்டின் குடிமகன் – மற்றொரு நாட்டின் கடற்படையால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவது மிகுந்த வேதனை அளிப்பதுடன், மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டால், அது இருநாட்டின் இறையாண்மைக்கும் எதிர்காலத்தில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, தங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும் என நம்பிக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் இதயத்தில் இடி விழுந்தது போல் உள்ளது இலங்கையின் இந்த அபராத அறிவிப்பு.
சர்வதேச கடல் எல்லையை தாண்டும் தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதிக்க இலங்கை அரசு கொண்டுவரவுள்ள சட்ட திருத்தத்தை தடுத்து நிறுத்த கொழும்பிலுள்ள இந்திய தூதர் மூலம் இலங்கை அரசுடன் பேசி, வருகின்ற ஜனவரியில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ள தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்திய மீனவர்களுக்கு எதிரான சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என இந்தியா – இலங்கையிடம் வலியுறுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் மத்திய அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.