• நியாய விலைக்கடைகளில் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் - மத்திய மாநில அரசுகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12-ம் தேதி ஏற்படுத்திய தாக்கத்தால் சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் – வேலூர் – திருவண்ணாமலை – தர்மபுரி – விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    புயலின் கோர தாண்டவத்தால் ஏறக்குறைய 25 பேர் உயிரிழந்ததுடன், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பழுதடைந்ததின் காரணமாக மின்சாரம் தடைபட்டு, தொலை தொடர்பு முற்றிலுமாக முடக்கப்பட்டதுடன், பல லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்து ஏறக்குறைய 10 ஆயிரம் கோடிக்கு மேல் வரலாறு காணாத பெரும் இழப்பை வர்தா புயல் ஏற்படுத்திவிட்டது.

    போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற்று வருவதும், அதனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் உள்ளிட்ட ஏனைய அமைச்சர்கள் நேரடியாக பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறிவருவதும் மிகுந்த பாராட்டிற்குரியதாகும்.

    வர்தா புயல் ஏற்படுத்திய சேதத்தை சீரமைக்கவும் உள்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும், தமிழக அரசு முதற்கட்டமாக ரூபாய் 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சற்று ஆறுதல் அளித்தாலும், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முழுமையாக சீரமைக்க மத்திய அரசிடம் ரூ.1000 கோடி ஒதுக்க கேட்டு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், உடனடியாக உரிய தொகையை மத்திய அரசு ஒதுக்குவதுடன், புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களின் அடிப்படையில் தேவைக்கேற்ப மேலும் நிதியை மத்திய அரசு வழங்கவேண்டும்.

    மேலும், வருகின்ற ஜனவரி மாதத்திற்கு, தமிழகத்திலுள்ள அனைத்து  நியாய விலை கடைகளிலும், அரிசி மற்றும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க மத்திய அரசிற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் தரவேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.