• கருத்து மாறுபாடு கொண்டவர்களிடமும் நட்புடன் பழகிவந்தவர் ‘சோ’ ராமசாமி - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிக்கையாளர் திரு சோ. ராமசாமி அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் இயக்குநர் நடிகர் வழக்கறிஞர் – அரசியல்வாதி என பன்முகம் கொண்ட சாதனையாளர் மறைந்த சோ. ராமசாமி அவர்கள்.

    முன்னாள் பிரதமர் திருவாஜ்பாய் அவர்களால் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு 1999 முதல் 2005 வரை திறம்பட செயலாற்றினார்.  தனது துக்ளக் எனும் அரசியல் வார இதழில் நையாண்டி எழுத்துக்கள் மற்றும் கேலி சித்திரங்கள் மூலம் அரசியலை காரசாரமாகவும், அனைவரும் ரசிக்கும் வகையிலும் விமர்சிக்கும் ஒரு புதிய பாதையை ஆரம்பித்து வைத்தவர் மறைந்த சோ அவர்கள்.

    இந்திய அளவிலும், தமிழகத்திலும் கருத்து மாறுபாடு கொண்ட பல்வேறு தலைவர்களிடமும் நட்புடன் பழகிவந்தவர். எனினும், பத்திரிக்கை மற்றும் அரசியல் உலகில் யாருக்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களை தீவிரமாக எடுத்துரைப்பார். அவரின் மரணம் தமிழக பத்திரிக்கை உலகில் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.