-
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது கூட்டு நடவடிக்கை குழுவுக்கு எதிரானது - டாக்டர் பாரிவேந்தர் கண்டனம்
வங்கக்கடலில் இந்திய கடல் எல்லையான கோடியக்கரையில் நேற்று இரவு (16.11.2016) மீன் பிடித்துக்கொண்டிருந்த, தமிழகத்தின் நாகை மாவட்ட மீனவர்கள் மற்றும் பாண்டிச்சேரியின் காரைக்கால் பகுதி மீனவர்களின் மீது, அத்துமீறி மனித தன்மையற்ற முறையில் மிகக் கொடூரமாக இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது மிகுந்த கண்டனத்திற்கும் வேதனைக்குரிய செயலாகும்.
கடந்த 1980-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுகளால் ஏறக்குறைய 850 தமிழக மீனவர்கள் இறந்தும், 500-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உடலில் ஊனமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி அதிகளவில் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் வலைகளை அறுத்து படகுகளை சேதப்படுத்தியும், தமிழக மீனவர்களை மிகுந்த துனபத்திற்கு ஆளாக்குவதுடன், 115 விலையுயர்ந்த படகுகளை இன்றுவரை இலங்கை அரசு விடுவிக்க மறுத்துவருவதுடன், சிறையில் வாடும் 87 மீனவர்களையும் விடுதலை செய்யவில்லை.
இருநாட்டு மீனவர்களின் உரிமைக்கும் – பிரச்சனைக்கும் நிரந்தரமான தீர்வு காணும் நோக்கில் 2014 முதல் 2015 வரை பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அது தோல்வியில் முடிந்த சூழலில் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் நோக்கில், இருநாட்டு மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை கடந்த 5-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சர்வதேச கடல் எல்லைப்பகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு “இனி எல்லைதாண்டினாலும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம், மேலும் இருநாட்டு கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரால் இருநாட்டு மீனவர்களை கையாளும்போது வன்முறையோ உயிரிழப்போ ஏற்படாது” என உறுதியளித்து 10 நாட்கள் கடந்த நிலையில், தற்போது உயிர்போகும் அளவிற்கு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது என்பது பல்வேறு சந்தேகங்களையும் – கேள்விகளையும் எழுப்பியுள்ளதுடன், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண உருவாக்கப்பட்டுள்ள “கூட்டு நடவடிக்கைக் குழுவின் முயற்சியை முற்றிலுமாக முறியடித்து முடக்கும் நோக்கமாகவே உணரப்படுகிறது.
இத்தாக்குதலுக்கு உள்ளான அரவிந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர்களுக்கு உரிய இழப்பீட்டினை இலங்கை அரசு வழங்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற கொடூரத் தாக்குதல்கள் எதிர்காலத்தில் நடக்காமலிருக்க தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை பாக்நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் நிலைநாட்டவும், டெல்லியில் இம்மாதம் வெளியிடப்பட்ட கூட்டு நடவடிக்கைக்குழுவின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் மத்திய அரசை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.