-
கூட்டு நடவடிக்கை குழுவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய தமிழக மீனவர்கள் 87 பேரை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்
தமிழகத்திலுள்ள புதுகை – தஞ்சை – நாகை – குமரி – நெல்லை ஆகிய மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கிவருவது மீன்பிடி தொழிலாகும்.
1974 – ம் ஆண்டு இந்தியா – இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தையும் மீறி இலங்கை கடற்படையினர், பாக்நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்குவதும் – வலைகளை சேதப்படுத்துவதும் – படகுகளை பறிமுதல் செய்வதும் – கைதுசெய்வதும் போன்ற அத்துமீறல்களை தொடர்ந்து நடத்திவருகிறது.
இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், கடந்த 2014 – ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை மற்றும் கொழும்புவில் நடந்த இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையும், 2015 ஜனவரி 24 அன்று சென்னையில் நடந்த மீனவ பிரதிநிதிகளின் பேச்சுவாத்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையும் ஏறக்குறைய தோல்வியிலேயே முடிந்துள்ள செய்தி மீனவர்களிடத்தில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பேச்சுவார்த்தையின் போது, “எல்லைதாண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது“ என இலங்கை அமைச்சர் உறுதியளித்த அதே நாளில், குழுவில் இடம்பெற்றிருந்த இலங்கையின் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமத்திரன் தனது அறிக்கையில், இலங்கை சிறையில் உள்ள 87 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 115 படகுகளையும் விடுவிக்க முடியாது என்ற ஆணவ பேச்சு கூட்டு நடவடிக்கை குழுவின் உறுதியற்ற தன்மையை வெளிக்காட்டியுள்ளது என்றே கூறலாம்.
மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண, இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை தொடங்கும்போது அனைவரும் ஒருமித்த குரலில் சொல்வது “மீனவர்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டக்கூடாது“ என்பதுதான்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும்தான் கடலில் எல்லையை தாண்டுகின்றார்களா..? இலங்கை மீனவர்கள் – இந்திய கடல் எல்லைக்குள்ளும், இந்திய மீனவர்கள் – பாகிஸ்தான் கடற்பகுதியிலும், வங்கதேச மீனவர்கள் – மியான்மர் கடற்பகுதியிலும், ஜப்பான், தைவான் மீனவர்கள் – ஆசிய கடற்பகுதிகளிலும் எல்லைதாண்டி மீன்பிடிக்கும்போது நடத்தப்படாத தாக்குதல்கள், தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமையை கொண்ட பாக்நீரிணை – மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்பிடிக்கும்போது மட்டும் சுடப்படுவது இலங்கை அரசால் திட்டமிட்டே நடத்தப்படும் சதியாகும்.
சர்வதேச கடல் எல்லை நிர்ணயப்படி, பாக் நீரிணையானது தமிழகத்தின் நாகை – தஞ்சை – புதுக்கோட்டை – ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் கடற்பகுதியையும், இலங்கையின் யாழ்ப்பாணம் – மன்னார் மாவட்ட கடற்பகுதிகளுக்கும் இடையே அமைந்திருப்பதால் தமிழக மீனவர்களுக்கு பாக்நீரிணையில் அதிக உரிமை உள்ளதை இலங்கை மறந்துவிட்டதா எனத் தெரியவில்லை.
தற்போது இந்தியா-இலங்கை மீனவ பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டு நடவடிக்கை குழுவாலும் இப்பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வாய்ப்பே இல்லை என்ற செய்தியை இலங்கையில் இருந்து வெளிவரும் சில நாளிதழ்கள் மேற்கோள் காட்டுகின்றன.
எனவே, டெல்லியில் உருவாக்கப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய முதல்கட்ட பணியாக, இலங்கை சிறையில் வாடும் 87 தமிழக மீனவர்களையும், தமிழக மீனவர்களிடமிருந்து இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 115 படகுகளையும், உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசினை இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.