-
சிவகாசி பட்டாசு தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்
சிவகாசி அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் – வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் இந்தியாவில் தயாராகும் மொத்தப் பட்டாசுகளில் ஏறக்குறைய 90 சதவீதம் சிவகாசியில் தான் தயாரிக்கப்படுகின்றன. தினமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் இந்த பட்டாசுத் தொழில் விளங்கி வருகின்றது.
தீபாவளி சீசன் தொடங்கி கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு விபத்துக்களில் ஏறக்குறைய 15 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இன்று நடந்துள்ள இக்கோர விபத்தானது, இத்தொழிலில் ஈடுபடுபவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடந்துள்ள இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு போதிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்குவதுடன், ஒரு விரைவு அதிரடி படையை ஏற்படுத்தி சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பட்டாசு குடோன்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், இது தீபாவளி பண்டிகை காலம் என்பதால், இரவு – பகலாக பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. எனவே தொழிற்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், முறையான மருத்துவர்கள் குழுவுடன் போதுமான அளவு தீயணைப்பு வாகனங்களையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாவண்ணம் விரைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழக அரசினை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.