-
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்கக்கூடாது - டாக்டர் பாரிவேந்தர் வலியுறுத்தல்
தமிழக அரசின் இடைவிடாத சட்டப்போராட்டம் - தொய்வில்லாத முயற்சியின் காரணமாக, உச்சநீதிமன்றம் கடந்த 5-ம் தேதி நான்கு வார காலத்திற்குள், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. அதனை நியாய உணர்வுள்ள அனைவரும் வரவேற்றனர்.
மத்திய அரசு இதனை ஏற்று, உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தது.ஆனால் நேற்று (03.10-2016) இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) முகுல்ரோஹித் அவர்கள் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு, ஏற்கனவே 3-நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நிலுவையிலிருப்பதால், அது சம்பந்தமாக 2-நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிடமுடியாது எனவும், காவேரி நடுவர் மன்றம் வழங்கிய உத்தரவை மத்திய அரசு ஏற்க இயலாது எனவும் வாதிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இது இரண்டு அண்டை மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக நடந்துவரும் நதிநீர் பங்கீட்டு பிரச்சனையாகும். இதில் இரு மாநில மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும் என்பதை மத்திய அரசு கருத்தில்கொண்டு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
இந்த பிரச்சனையில் ஒரு வேளை காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால்,அதில் இருக்கும் சாதக – பாதகங்களில் ஒருபோதும் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்பதுடன், தமிழகம் தொடர்ந்து கர்நாடகத்தின் வஞ்சக போக்கிற்கு ஆளாகும் சூழல் ஏற்படும்.
நூற்றாண்டுகள் கடந்து இன்றுவரை ஓயாமல் இருமாநில மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் – வாழ்வாதாரத்திற்கும் பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கும் காவேரி நீர் பங்கீட்டுக்கு ஒரே தீர்வு காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமேயாகும்.
எனவே, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஏற்கனவே வழங்கிய உறுதிமொழியிலிருந்து பின்வாங்காமல், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய அரசை கேட்டுக்கொள்கின்றேன்.