• காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு - தமிழக முதல்வருக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக அரசின் உரிமை போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் - தமிழக முதல்வருக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து.

    தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், “இன்னும் இரண்டு வார காலத்திற்குள்ளாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவினை இந்திய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கின்றது.

    கடந்த 2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் காவேரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது. அதன்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் 192டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். ஆனால், எந்த ஆண்டும் கர்நாடக அரசு இதனை மதித்து நடப்பதில்லை என்பதை கொள்கை முடிவாகவே கொண்டுள்ளது. ஆண்டுதோறும் சம்பா மற்றும் குறுவை சாகுபடிக்கு தமிழகம், கர்நாடகத்திடம் காவேரி தண்ணீரை கேட்பதும் – அதற்கு கர்நாடகம் மறுப்பதும் வாடிக்கையாகவே உள்ளது.

    கர்நாடகத்தின் இந்த சதிச்செயலை சட்டத்தின் துணையோடு முறியடிக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றிதான் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு. ஏற்கனவே, காவேரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பினை 2013-ம் ஆண்டு மத்திய அரசிதழில் வெளியிட வைக்கவும் இதைப்போன்றே சட்டபோராட்டத்தினை நடத்தி அதிலும் வெற்றிபெற்றார்.   

    எண்ண ஓட்டம் (Mind formation) – பத்திரிக்கை செய்தி (Reading paper) உண்மை நிலை (Observing Reality) ஆகியவற்றின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், காவேரி பிரச்சனைகள் கடந்து வந்த பாதையை கருத்தில் கொண்டு, 21-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை தினமும் விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்பதுடன், 2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில்4-வார காலத்திற்குள் மத்திய அரசு “காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் முறையீட்டு குழுவை” அமைக்க உத்தரவிட்டுள்ளது.

    இந்த  உத்தரவு, தமிழக அரசின் விடாமுயற்சிக்கும் – உரிமை போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இவ்வெற்றிக்கு காரணமாக இருந்த தமிழக முதல்வருக்கு என் வாழ்த்துக்களை தெரித்துக்கொள்கின்றேன். அதேவேளையில், மத்திய அரசும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்திற்கு நீதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.