-
உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற மாரியப்பன் தன்னம்பிக்கையின் உச்சம் - டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான 31-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரியப்பன் தங்கவேல் அவர்கள், 1.89 மீட்டர் உயரத்தைத் தாண்டி தங்கம் வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனையை நிகழ்த்தியிருப்பது ஒவ்வொரு தமிழருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிப்பருவத்திலேயே உயரம் தாண்டுதலில் அசாத்தியத் திறமை கொண்டிருந்த மாரியப்பன், கடந்த 2012 முதல் 2015 வரை நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களைப் பெற்றிருந்தாலும், தற்போது அவரின் சாதனையை அவரே முறியடித்து தனது கடைசி உட்சபட்ச உயரமான1.74 மீட்டரிலிருந்து, 1.89 மீட்டர் என்ற அதிகபட்ச இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.
உடலில் ஏற்பட்ட குறைகளை மறந்து உள்ளத்தில் நம்பிக்கை தாகத்தை விதைத்து, உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த மாரியப்பன் தன்னம்பிக்கையின் உச்சம். இனிவரும் ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் பல்வேறு போட்டிகளிலும் அவர் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து தாய்நாட்டிற்கு பெருமை தேடித்தர வேண்டுமென கூறி, என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.