-
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள தமிழக வீரர்களுக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து
உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழா என கருதப்படும் ஒலிம்பிக் போட்டியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகின்றது.
இதன்படி 31 – வது ஒலிம்பிக் போட்டி “புதியதோர் உலகம்“ என்ற நோக்கத்தோடு பிரேசில் நாட்டின் ரியோ – டி – ஜெனிரோ நகரில் இன்று (06.08.2016) தொடங்கி வரும் 21.08.2016 வரை நடைபெற உள்ளது.
ஏறக்குறை 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை – ஜுடோ – கோல்ப் – பேட்மிண்டன் – தடகளம் – டென்னிஸ் – டேபிள்டென்னிஸ் - பளுதூக்குதல் – ஜிம்னாஸ்டிக்ஸ் – நீச்சல் – துடுப்பு படகு – வேகநடை – துப்பாக்கி சுடுதல் – தொடர் ஓட்டம் – மல்யுத்தம் போன்ற பிரிவுகளில் விளையாட சுமார் 121 பேர் கொண்ட அணி ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளது. இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் விளையாட்டில் முதன்முறையாக பங்கேற்கும் மிகப்பெரிய அணி இதுவேயாகும்.
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தொடர் ஓட்டத்தில் பங்கேற்க திருச்சி லால்குடி ஆரோக்கியராஜ், திருப்பூர் அவிநாசி அய்யாசாமி, சென்னை அம்பத்தூர் மங்களாபுரம் மோகன்குமார் ஆகியோரும், அதுபோல் பளுதூக்கும் போட்டியில் வேலூர் சத்துவாச்சேரி சதீஷ்குமார்சிவலிங்கம், வேகநடை போட்டியில் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி கணபதி, டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த சரத் கமல் உள்ளிட்ட ஆறு தமிழக வீரர்கள் ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஒலிம்பிக்கில் கலந்துகொண்டுள்ள இந்தியாவின் அனைத்து வீரர் – வீராங்கனைகள் தங்களின் வாழ்நாள் லட்சியத்தை நிறைவேற்ற இது ஒரு பொன்னான வாய்ப்பாக கருதி, மிகுந்த நம்பிக்கையுடன் தங்களின் முழுத் திறமைகளை காட்டி வெற்றிபெற்று நாட்டிற்கும் – வீட்டிற்கும் பெருமைசேர்க்க வேண்டும் எனக் கூறி அவர்களுக்கு எனது உளம்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.