• கைது செய்யப்பட்ட 32 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆந்திர மாநில அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    கடந்த ஆண்டு (2015) ஏப்ரல் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த 20 பேர் ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தினார்கள் என குற்றம் சாட்டி அம்மாநில காவல்துறை 20 தமிழர்களை துடிக்க துடிக்க சுட்டுக்கொன்றது. அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

    இந்நிலையில் நேற்று (04.08.2016) இரவு சென்னையிலிருந்து – திருப்பதி சென்ற கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 32 பேரை செம்மரம் வெட்ட வந்தவர்கள் என குற்றம் சாட்டி ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ஆந்திர அதிரடிப் படை போலீஸ் கைது செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    கைது செய்யப்பட்ட 32 பேரையும் பத்து, பத்து நபராக பிரித்து திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா காவல் நிலையங்களில் வைத்து சித்திரவதை செய்து விசாரணை நடத்துவதாகவும், அவர்கள் அனைவரின் மீதும் செம்மரம் வெட்டி கடத்துதல் உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது. 

    சமீபகாலமாக அப்பாவி தமிழர்கள் அழுக்கு சட்டையுடன் ஆந்திரா எல்லையில் கால்வைத்த உடனேயே, செம்மரம் வெட்ட வந்துவர்கள் என குற்றம் சாட்டி ஆந்திர காவல்துறையினர் கைது செய்கின்றனர். அத்துடன், சித்தூர் பஸ்நிலையம், திருப்பதி பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் தேடித் தேடி தமிழர்களை கைது செய்து வருகின்றது ஆந்திர காவல்துறை.

    தமிழர்கள் என்றாலே விசாரணையின்றி கைது செய்வதும் சாமி கும்பிட செல்லும் அப்பாவித் தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துவதும் ஆந்திர காவல்துறையின் வாடிக்கையாகிவிட்டது. இதே நிலை நீடித்தால் மனித நேயம் கேள்விகுறியாவதுடன் இரு மாநில மக்களின் உறவில் பெரும் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.

    கல்வி, வேலை, வியாபாரம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழர்கள் ஆந்திராவிலும், ஆந்திரர்கள் தமிழகத்திலும் பரவலாக வசித்து வரும் சூழ்நிலையில், இதுபோன்ற திட்டமிட்ட கைது சம்பவம் இரு மாநில மக்களிடத்தில் பெரும் பாதிப்பினை உருவாக்க வாய்ப்புள்ளது.

    எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களையும் உடனடியாக விடுவிப்பதுடன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என ஆந்திரமாநில அரசை கேட்டுக் கொள்கின்றேன்.