-
‘அப்துல்கலாம் அறிவியல் தொழில்நுட்ப நூலகம்‘ அமைக்க தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
இந்திய இளைஞர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவரும்,முன்னாள் குடியரசுத் தலைவரும், தேசத்தின் மிக முக்கிய விண்வெளித்துறை விஞ்ஞானிகளில் முதன்மையானவருமான டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நாளை (ஜூலை27) வரவுள்ளது. அவர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்தாலும், அவரின் நினைவுகள் நம் நெஞ்சைவிட்டு என்றைக்கும் மறையாது. காரணம் நேர்மறை சிந்தனைகள் மூலம் தேசத்தின் வளர்ச்சியை – வல்லரசு இந்தியாவை – முன்னெடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றியவர் என்பதனால் அவர் என்றும் நம் மதிப்பு வாய்ந்த ஆளுமையாக திகழ்கிறார்.
அவரின் முதலாமாண்டு நினைவு நாளில், அவர் பிறந்த ராமேஸ்வரம்– பேகரும்பு என்கிற பகுதியில் அவரின் நினைவு இல்லம் அமைந்துள்ள இடத்தில், 7 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட மிக நேர்த்தியான அவரின் வெண்கலச் சிலை திறக்கப்பட உள்ளது.
தென் தமிழகத்தில் பிறந்து இமயமலையின் முகடுவரை தன் புகழ்கொடியை ஏற்றி பறக்கவிட்ட டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வெண்கலச் சிலையை அமைக்கவும், அதனை திறந்து வைக்கவும் உள்ள பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே நாளில், டாக்டர் கலாம் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டவுள்ள உள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு மேலும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், குறிப்பாக உயர்நிலை மற்றும் மேநிலைப்பள்ளிகளில், டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பெயரில் “அறிவியல் தொழில் நுட்ப நூலகம்“ அமைக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும். ஏனெனில், ‘இன்றைய வகுப்பறைகளிலேயே நாளைய இந்தியா நிர்மாணிக்கப்படுகிறது’ என டாக்டர் கலாம் அவர்கள் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளார். அவரின் கூற்றுக்களை மெய்ப்பிக்க, இது நமக்கொரு நல்ல தருணம் எனக் கருதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் பெயரில் “அறிவியல் தொழில்நுட்ப நூலகம்“ அமைக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.