-
ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணியில் தருண்விஜய்க்கு ஆதரவாக IJK துணை நிற்கும் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு
மனித இனத்தின் அனைத்து எல்லைகளையும் கடந்து “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓங்கி குரல்கொடுத்த மனிதநேய சிந்தனையாளர் திருவள்ளுவரின் சிலையை உத்தரகாண்ட மாநிலம் ஹரித்துவாரின் கங்கைக் கரையில் நிறுவ அனுமதியின்றி, சாக்குமூட்டை போல் கட்டி கேட்பாரற்று கிடக்கும் செய்தி,உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயத்தில் எரி ஈட்டியாக பாய்ந்துள்ளது.
பா.ஜ.க – வின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தருண்விஜய் அவர்களின் சீரிய முயற்சியால் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் புகழ் வடபுலம் எங்கும் பரவும் சூழல் ஏற்பட்டிருந்தது.
கன்னியாகுமரியிலிருந்து திருவள்ளுவரின் சிலையை எடுத்துச் செல்லும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. மேலும் அந்த நிகழ்ச்சயில் கலந்துகொள்ள வருமாறு திரு.தருண் விஜய் அவர்கள் தொலைபேசியிலும் அழைப்பு விடுத்திருந்தார். கன்னியாகுமரியில் உயர்ந்து நிற்பது போல், ஹரித்துவாரிலும் திருவள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கட்டும் என வாழ்த்துச் செய்தி அனுப்பினேன். இதற்கிடையில் அங்கே திருவள்ளுவர் சிலை நிறுவ அனுமதி கிடையாது என்ற செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சியிலும் – வேதனையிலும் ஆழ்த்தியது.
திருவள்ளுவரின் மீது அளவற்ற மதிப்பும் – மரியாதையும் கொண்டுள்ள திரு.தருண்விஜய் அவர்கள், ஹரித்துவாரில் மீண்டும் சிலையை நிறுவ முயற்சி மேற்கொள்வதை இந்திய ஜனநாயகக் கட்சி உளமார பாராட்டி வரவேற்கின்றது.
மேலும், ஹரித்துவாரின் கங்கைக்கரையில் வள்ளுவரின் சிலையை நிறுவ தமிழகத்தின் ஒத்துழைப்பும் – உறுதுணையும் வேண்டும் என திரு.தருண்விஜய் அவர்கள் நினைத்தால், அதற்கு இந்திய ஜனநாயகக் கட்சி தன் முழுமையான பங்களிப்பினை வழங்கி துணைநிற்கும் என தெரிவித்துக் கொள்கின்றேன்.