-
பால் குளிரூட்டும் சேமிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - தமிழக அரசிற்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
தமிழகம் முழுவதும் தினமும் பால் உற்பத்தியாளர்கள் மூலம் 30 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 11,503 பால் கொள்முதல் சங்கங்களின் மூலம் 25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது.
இவற்றில் 22 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் நிறுவனத்தினால் பதப்படுத்தி வைக்கப்படுகின்றது. எஞ்சியுள்ள 3 லட்சம் லிட்டர் பால், போதிய அளவிற்கான குளிரூட்டும் நிலையங்கள் இல்லாததால் வீணாகி விடுகின்றன. போதுமான எண்ணிக்கையில் தரமான குளிரூட்டும் நிலையங்கள் இல்லாததால்ஆவின் நிறுவனம் ஏறக்குறைய 15 சதவீதம் அளவிற்கு பால் கொள்முதலை தவிர்த்து வருகின்றது. இதன்காரணமாக பால் உற்பத்தியாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிவருகின்றனர்.
குறிப்பாக போதிய குளிரூட்டும் மையங்கள் ஆவின் நிறுவனங்களிடம் இல்லாததால், கோடை காலங்களில் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றது. இதனால் தினமும் 5லட்சம் லிட்டர் பால் வீணாக ரோட்டில் கொட்டி அழிக்கபடுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் போதுமான எண்ணிக்கையில் ஆவின் பால் கொள்முதல் குளுரூட்டும் சேமிப்பு கிடங்குகளை அமைத்து, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வதாரத்தை பெருக்க வழிவகைசெய்ய வேண்டுமென என தமிழக அரசினை கேட்டுக்கொள்கின்றேன்.