• அழிந்துவரும் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய மாநில அரசுகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    இந்தியாவின் பாரம்பரியம் – பண்பாடு – நாகரீகம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் வரலாற்றுச் சின்னங்கள் யாவும் மெல்ல மெல்ல அழிந்து வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது.

    சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புராதான கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், நடுகற்கள் ஆகிவை அழிக்கப்பட்டு வருகின்றன குறிப்பாக – தர்மபுரி மாவட்டத்தில் உள்ள - ராயக்கோட்டை – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  – ஒசூர் இலியாட் லாக் – திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள – வந்தவாசி கோட்டை, தண்டராம்பட்டு சிற்ப குளம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள – திருமயம் கோட்டை மற்றும் மதுரை, விழுப்புரம், வேலூர், ஆகிய மாவட்டங்களில் பெருமளவில் வரலாற்று சிற்பங்கள் , சின்னங்கள்,  அழிக்கப்படுகின்றன. இவைகள் தொல்லியல் துறையின் அலட்சியத்தால் கணக்கிடப்படாமலும் – கண்டுகொள்ளப்படாமலும் அழிந்து வருகின்றன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    அதுபோல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏறக்குறைய நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட சாமி சிலைகளும் – சிற்பங்களும் சமூக விரோத கும்பல்களால் திருடப்பட்டு அயல்நாட்டில் பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்தியாவின்  பழங்கால வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதற்கெனவே தனி சட்டம் 1958 – லும், தமிழகத்தில் 1966 - லும் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் பல நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் – குகைகள் – பாறைகள் ஆகியவற்றை பாதுகாக்க தொல்லியல் துறை  உருவாக்கப்பட்டது.

    ஆனாலும், இத்துறை வருடாந்திர அடிப்படையில் புராதான சின்னங்களை கணக்கிட்டிருந்தால், நமது சிலைகளை பாதுகாப்பதுடன் – திருடப்பட்ட சிலைகளை உரிய நேரத்தில் மீட்டிருக்கலாம்.

    கடந்த 2009-ம் ஆண்டு, மன்மோகன் சிங் தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டிலுள்ள பாரம்பரிய – புராதான சின்னங்களை பாதுகாக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இன்றுவரை நாட்டிலுள்ள எந்த ஒரு புராதான சின்னங்களும் பாதுகாக்கப்படவில்லை என்பதனை உறுதிசெய்வது போல்  நடந்துவரும் தொடர்ச்சியான சிலை திருட்டு நிகழ்ச்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.

    அதுபோல் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான “கற்திட்டு“ - ஐ பற்றி போதிய விழிப்புணர்வும் அதனை பாதுகாக்கவும் எந்தவித நடவடிக்கையும் தொல்லியல் துறை எடுக்கவில்லை. இதற்கு காரணம் வெறும் 100 ஆண்டுகள் பழமையான வரலாற்று சின்னங்களை மட்டுமே பாதுகாத்து வருவதாக அரசிற்கு தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்ததாக தெரிகின்றது.

    பழமையான குகைகள் – கோவில்கள் – அனைத்தும் சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் திருட்டு போனவற்றில் வெறும் 17 கலைப்பொருட்களை மட்டுமே இந்தியா இதுவரை மீட்டுள்ளது.

    பண்டைய காலத்து வரலாற்று சின்னங்கள் – குகைகள் – கல்வெட்டுகளை அடுத்த தலைமுறைக்கு அழியாமல் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

     உலகளவில் இத்தாலி – கம்போடியா – எகிப்து போன்ற நாடுகள் எவ்வாறு சட்டதிட்டங்களை கடுமையாக்கி, சமூக குற்றவாளிகளை தண்டித்து, புராதான சின்னங்களை பாதுகாக்கின்றதோ அதுபோல், இந்தியாவிலும் இதுபோன்ற கடுமையான சட்டங்களை இயற்றி, அழிந்து வரும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளை கேட்டுக்கொள்கின்றேன்.