• 20 செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் செலுத்தி விண்வெளி அறிவியல் துறையில் மாபெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளது இந்தியா - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

          இன்று (22.06.2016) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஒரே நேரத்தில் பல்வேறு பயன்பாட்டிற்காக 20 செயற்கை கோள்களை  ஒரே ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

          ஏற்கனவே 2008-ம் ஆண்டில், ஒரே நேரத்தில் 10 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில்  செலுத்தி சாதனை படைத்தது இந்தியா. அந்த சாதனையை முறியடித்து தற்போது 20 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி மாபெரும் பாய்ச்சலை தற்போது நிகழ்த்திகாட்டியுள்ளது.

          இந்தியாவில் வானிலை, தொலைத்தொடர்பு மற்றும் ராக்கெட் தொழில்நுட்பம் வளர்ந்து வந்த காலத்தில் பொருளாதார பலவீனத்தின் காரணமாக, தான் தயாரித்த ஒரு செயற்கைகோளை விண்ணில் ஏவி, நிலைநிறுத்த தொழில்நுட்பத்தில் வளர்ந்த பிற மேலைநாடுகளிடம் காத்துக்கிடந்த அவல நிலை மாறி, தற்போது வளர்ந்த நாடுகள் தயாரித்த செயற்கைகோள்களை தனது ராக்கெட்டின் மூலம் ஏவுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கின்றது.

          நவீன மோட்டார் பொருத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி.34 ராக்கெட்டின் மூலம் இஸ்ரோவின் கார்ட்டோசாட்-2, மற்றும் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 17 செயற்கைகோள்கள் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது மொத்தம் 1288 கிலோ  எடைகொண்ட 20 செயற்கைகோளையும் ஒரே நேரத்தில் ஏவி அதனை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்திருப்பது இந்தியா விண்வெளி தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளைவிட முன்னேறியுள்ளதை நமக்கு உணர்த்துகின்றது.

          குறிப்பாக இஸ்ரோ தயாரித்த கார்ட்டோசாட்-2 செயற்கைகோளானது பலவிதங்களில் வித்தியசமானது. இதில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன இரண்டு கேமராக்களின் மூலம் பூமியில் உள்ள எந்த ஒரு பொருளையும் முப்பரிமாணத்தில் (3D) 30 கி.மீ பரப்பளவில் படங்களாக எடுத்து பூமிக்கு அனுப்பும். தரைக்கட்டுப்பாட்டுடன் தொடர்புகொள்ள முடியாத நேரத்தில் தனக்குதானே அப்படங்களை சேமித்துவைக்கும் ஆற்றல் கொண்டது என்பது மேலும் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஒரு மைல்கல்லாகும்.

          இந்த வரலாற்று சாதனைக்காக,  இரவு பகலாக உழைத்த இஸ்ரோ தலைவர் – விஞ்ஞானிகள் – பொறியாளர்கள் – தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, வருங்காலத்தில் இந்தியா உலகிற்கே தலைமை ஏற்கும் நிலையை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.