-
மது அருந்தியவர்கள் பேருந்துகளில் பயணிக்க அனுமதி இல்லை என சட்டம் இயற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கைகளிலும் –பரப்புரைகளிலும் அனைத்து கட்சிகளும் முன்வைத்த வாக்குறுதி, “மதுக்கடைகளை முற்றிலுமாக மூடுவோம்“ என்பதுதான். ஆனால் கடந்த 2011 – ம் ஆண்டு முதல் இந்திய ஜனநாயகக் கட்சி தனது தேர்தல் பரப்புரைகளில் “மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம்“ என்ற முழக்கத்தினை முன்னெடுத்து, இன்றுவரை தமிழகம் முழுவதும் அதனை தொடர் போராட்டங்களின் மூலம் அரசுக்கு வலியுறுத்திவருகின்றது.
‘படிப்படியாக மதுவிலக்கினை அமல்படுத்துவோம்’ என அஇஅதிமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதைப் போல், தற்போது மதுக்கடைகளின் விற்பனை நேரத்தில் 2 மணி நேரத்தினை குறைத்ததுடன், முதற்கட்டமாக 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதை இந்திய ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது. அதேபோல், மது உற்பத்தி ஆலைகளிலிருந்தும் மது கொள்முதல் அளவை குறைப்பதுடன், மதுக்கடைகளின் வேலை நேரத்தினை பகல் 12 மணி முதல் இரவு 8.00 மணி வரை என்று கால அளவையும் குறைக்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்துகள், திரையரங்குகள் மற்றும் பொது இடங்களில் புகைப்பிடிக்க அனுமதியில்லை என்றும், இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனும் சட்ட விதிகள் அமலில் உள்ளது. இதேபோல், மது அருந்திவிட்டு பேருந்துகளில் பயணிக்கக் கூடாது எனவும், மீறினால் ஓட்டுனரும் – நடத்துனரும் மது அருந்தியவரை பேருந்திலிருந்து இறக்கிவிடலாம் எனும் உத்தரவினை அரசு பிறப்பிக்க வேண்டும். இதற்கான சட்டத்தை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இயற்ற வேண்டும். இதனால் ஏறக்குறைய 20 சதவீதம் அளவிற்கு மது அருந்துவோர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
மேலும் மது அருந்துபவர்கள் தங்களை “அரசின் செல்லப் பிள்ளைகள்“ என கருதுவதால் காவல்துறையும் இவர்கள் மீது வழக்கு போட்டு தண்டிக்க முடியவில்லை. மது அருந்திவிட்டு செய்யும் எந்த தவறுக்கும் தண்டனையில்லை என்ற மனநிலை உருவானதால் தான் பல்வேறு கலாச்சார சீரழிவு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
பொது இடங்களிலும் – பேருந்துகளிலும் புகைக்கு எதிரான கண்டன வாசகம் எழுதியுள்ளதைப்போல், மதுவுக்கு எதிரான கண்டன வாசகத்தையும் எழுதி நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் 25 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை இல்லை என அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் உத்தரவிட வேண்டும்.
தற்போது 500 மதுக்கடைகளை மூடியது பொதுமக்களிடத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. வருங்காலத்திலும் படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து மதுவில்லா தமிழகத்தை உருவாக்கினால் ஆளும் அஇஅதிமுக அரசிற்கு ஆதரவு பெருகி – நிரந்தரமாக மக்களின் இதயத்தில் நிலைத்து நிற்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, மதுக்கடைகளின் நேரத்தையும் – எண்ணிக்கையையும் படிப்படியாக குறைப்பதுடன், முழு மதுவிலக்கை அமுல்படுத்த இப்போதிருந்தே அதற்கான பணிகளை துவங்க வேண்டும் என தமிழக அரசினை கேட்டுக் கொள்கின்றேன்.