-
நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுகளை சுத்திகரிக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் - மத்திய – மாநில அரசுகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வெள்ளியங்கிரி மலையில் உருவாகி கோவை – ஈரோடு – கரூர் – திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக பாய்ந்து நொய்யல் எனும் இடத்தில் காவிரி ஆற்றுடன் கலப்பதுதான் இந்த நொய்யல் ஆறு.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் செயல்படும் ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளின் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரானது நொய்யல் ஆற்றில் கலப்பதால் நீர்வளம் மாசுபட்டதுடன், மண் வளமும் முற்றிலுமாக மலட்டுத் தன்மைக்குள்ளாகியுள்ளது.
தேசிய சுற்றுச்சூழல் நீர் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நொய்யல் ஆற்றில் அதிகளவு உப்புத்தன்மையும் – ரசாயன நெடியும் கலந்துள்ளதாக கூறியுள்ளது.
இந்தியாவில் குடிதண்ணீரில் உப்பின் தன்மை 70TDS (Total Dissolve Salt) –ம், விவசாயத்திற்கு 2100 TDS-ம் என்ற அளவில்தான் வேதிப்பொருட்களின் கலவை இருக்கவேண்டும். ஆனால் சாயப்பட்டறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் ஏறக்குறைய 4700 முதல் 6000 TDS அளவில்,உப்புடன் பிற வேதிப்பொருட்களும் அதிகளவில் நொய்யல் ஆற்று தண்ணீரில் கலந்திருப்பதால் நீர் அதன் இயல்பு தன்மையிலிருந்து முற்றிலுமாக மாறி அதிக நெடியுடன் இருப்பதால், நொய்யல் ஆற்றின் கரையோரங்களில் இருக்கும் ஏறக்குறைய 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதுடன், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் அழிந்து மலட்டு மண்ணாகியதால் விவசாயம் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது.
மேலும் கால்நடைகளுக்கு கருச்சிதைவை ஏற்படுத்துவதுடன்,மனிதர்களுக்கு தோல் நோயும் ஏற்பட்டு வருகின்றது. ஆயத்த ஆடைகள் மூலம் இந்தியாவிற்கு ஆண்டிற்கு ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி ரூபாய்வருவாயை ஈட்டினாலும், சாயக்கழிவுகள் மூலம் இயற்கையின் கொடையான ஆற்று நீரை முற்றிலுமாக அழித்துவருகின்றது
திருப்பூரில் ஏறக்குறைய 1500-க்கு மேலான சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 450 சாயப்பட்டறைகள் மட்டுமே இணைந்து 20பொது சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன. மீதமுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாய கழிவுகள் நாளொன்றுக்கு பலகோடி லிட்டர் நேரடியாகவே நொய்யல் ஆற்றில் விதிகளை மீறி கலக்கப்படுகின்றது.
அதிக அமிலத்தன்மை கொண்ட சாயக்கழிவுகளை பிரிப்பதற்கு நவீன அறிவியல் தொழில்நுட்ப முறைகளில் ரசாயன கழிவுகளை பிரித்தெடுத்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் மட்டுமே கழிவு நீரை ஆற்றில் கலக்கவேண்டும் எனும் விதியை சாயப்பட்டறைகள் கடைபிடிப்பதில்லை.
இதற்கு காரணம் அலட்சியமும், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க போதிய நிதியும் இல்லாததே ஆகும். இதனை போக்க பெரு நிறுவனங்களை தவிர்த்து எஞ்சியுள்ள நடுத்தர – சிறு சாயப்பட்டறைகளுக்கு மத்திய – மாநில அரசுகளே பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தர முன்வரவேண்டும். மேலும் அனைத்து சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் முறையாக சுத்திகரிப்படுகின்றதா…? என்பதை ஆராய துறை சார்ந்த வல்லுநர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து முறையான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு மத்திய – மாநில அரசுகள் இணைந்து திட்டம் வகுப்பதுடன், அதனை செயல்படுத்த முனைப்பு காட்டவேண்டும்.
மேலும், நதி என்பது இயற்கையின் கொடை என்பதினை உணர்ந்தும் - நீர் இன்றி அமையாது உலகு என்ற முதுமொழியை நெஞ்சத்தில் நிறுத்தி,எஞ்சியுள்ள நீர் ஆதாரங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு நீரின் பயன்பாட்டை கொண்டுசெல்ல வழிவகுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.