• நாளை டெல்லிசெல்லும் தமிழக முதல்வர், பிரதமர் மோடியிடம் - இலங்கை வடகிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெற வலியுறுத்த வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

          கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை ராணுவம் – விடுதலைப் புலிகள் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று முடிந்தது. இதன் பிறகு இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வாழும் வட கிழக்கு மகாணங்களில் அப்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் உத்தரவுப்படி ஒன்றரை லட்சம் ராணுவத்தினர் முகாமிட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

          கடந்த 2015-ம் ஆண்டு இலங்கையில் தேர்தல் நடைபெற்று அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில்,இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறப்பட்டது – போரின்போது இலங்கை ராணுவம் கைபற்றிய உடைமைகள் யாவும் திரும்ப அளிக்குமாறும்,போரின்போது இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்யவும் – தமிழர்களின் பகுதியிலுள்ள ராணுவத்தினை திரும்பப்பெற வேண்டும் எனவும் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

          ஆனால் இன்றுவரை துளி அளவு கூட இலங்கை அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. போர் முடிவடைந்து ஏறக்குறை 7-ஆண்டுகள் ஆகியும் தற்போதுவரை இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வாழும் வடகிழக்கு மகாணங்களில் 5 அல்லது 6 பேருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற முறையில் ஏறக்குறைய ஒருலட்சத்து 85 ஆயிரம் ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.இதன்காரணமாக போரில் இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நிலத்திற்கு திரும்ப முடியாததாலும் - தனியார் நிலங்கள் – விவசாய நிலங்கள் அனைத்தும் ராணுவத்தின் முழுகட்டுப்பாட்டில் உள்ளதாலும், பள்ளிகள் –கல்லூரிகள் – திருவிழாக்கள் ஆகியவை நடைபெற ராணுவத்தின் முன்அனுமதி பெற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

          வடக்கு மகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள்,இலங்கை ராணுவத்தினை திரும்ப அழைத்துக்கொண்டு,காவல்துறையினருக்கு அதிகாரம் அளிக்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வலியுறுத்தினார். ஆனால் இதையும் சிறிசேனா அரசு புறக்கணித்து விட்டது.இதனை வடக்கு மண்டல ராணுவ தளபதி மகேஸ் சேனநாயகாவும் உறுதிபடுத்தியுள்ளார்.

          இந்நிலையில், நாளை (14.06.2016) டெல்லி செல்லும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களை  சந்திக்கும்போது தமிழக மீனவர் பிரச்சனை மற்றும் வடகிழக்கு மகாணங்களில் இலங்கை ராணுவத்தை வாபஸ் பெறுவது இதுகுறித்தும் வலியுறுத்தி பேசவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.