-
நிலத்தடி நீர்மட்டம் உயர மழைநீர் சேமிப்புத் திட்டத்தை கட்டாயமாக்க வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
வறட்சியை சமாளிக்கும் நோக்கில் கடந்த 2002 – ஆம் ஆண்டு தமிழக அரசினால் கொண்டுவரப்பட்ட கட்டாய மழைநீர் சேமிப்புத் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுவதில்லை. கணிசமான அளவிற்கு பருவமழை பெய்திருந்தும் முறையாக நீர் மேலாண்மை இல்லாத காரணத்தினால் திருவள்ளூர் –காஞ்சிபுரம் – திருவண்ணாமலை – வேலூர் – தர்மபுரி – கிருஷ்ணகிரி –விழுப்புரம் – நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலுமாகக் குறைந்து பூஜ்ஜியம் என்ற நிலையை விரைவில் எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தமிழக நீர்வள ஆதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை – விரிவாகிவரும் வேளாண்மை –பெருகிவரும் தொழிற்சாலை ஆகியவற்றை கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாத பாலைவனமாக தமிழகம் மாறாமலிருக்க அனைத்து ஏரி –குளம் – கன்மாய்கள் – கிணறுகள் ஆகியவற்றில் மழைநீரை கட்டாயம் சேமிக்கவேண்டும்.
ஒவ்வொரு தனி நபரும், “மழைநீர் என்பது வாழ்வியல் உயிர்நீர்” என்ற உணர்வுடனும் – சமூக அக்கறையுடனும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் பூமிக்குள் திரும்பிப் போக வழிவகை செய்யவேண்டும்.
மேலும் மழைநீர் சேமிப்பு பற்றி முறையான தொடர் விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மழைநீர் சேமிப்பு திட்டத்திற்கு மறுவாழ்வு தர வேண்டிய கட்டாய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்தை 2002 ம் ஆண்டு துவங்கிய அதிமுக அரசே தற்போது ஆளும் பொறுப்பில் உள்ளதால், மழைநீர் சேமிப்புத் திட்டத்தை கட்டாயமாக்கி –நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகைசெய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.