-
புகையிலை பழக்கங்களிலிருந்து முற்றாக வெளிவரவேண்டும் இளைஞர்களுக்கு - டாக்டர் பாரிவேந்தர் வேண்டுகோள்
ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் நாள் உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகின்றது. பல ஆண்டுகளாக புகைபிடிப்பது என்பது இளைஞர்கள் மத்தியில் கௌரவ கலாச்சாரமாக வளர்ந்து வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது.
உலக சுகாதார மைய புள்ளி விவரங்களின்படி புகைபிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 60 லட்சம் பேர் உலகளவில் உயிரிழக்கின்றனர். அதில் 12 லட்சம் பேர் இந்தியர்களாகும். இதே நிலைமை நீடித்தால் வரும் 2035-ல் இந்தியாவில் புற்றுநோய் இறப்பு ஏறக்குறைய 20 லட்சத்தை எட்டிவிடும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் ஏறக்குறைய 50 சதவீதத்தினர் பொது இடத்தில் புகைபிடிக்கும் பழக்கம் இருப்பதால் குழந்தைகள் உள்ளிட்ட பிறரும் மறைமுகமாக பல்வேறு புகையிலை நோய்களுக்கு ஆளாகின்றனர்.
புகையிலையினால் ஏற்படுகின்ற வாய்புற்றுநோய் கொண்ட நோயாளிகள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகளவில் உள்ளனர். இவற்றில் ஆண்கள் 56.4 சதவீதமும், பெண்கள் 44.9 சதவீதமும் பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதாரமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொது இடங்களில் சிகரெட் பிடிப்பவர்கள் மீதும், திரைப்படம் – தொலைக்காட்சி போன்றவற்றில் சிகரெட்டு பிடிக்கும் காட்சிகளை தடைசெய்யவும் கடுமையான சட்டம் இயற்றி அமல்படுத்திட வேண்டும்.
மேலும், நாட்டின் எதிர்கால வளர்ச்சியை உள்ளத்தில் சுமந்து நிற்கும் இந்தியாவின் ஏறக்குறைய 65 சதவீத இளைஞர்கள், தாமே முன்வந்து புகையிலை தொடர்பான தீய பழக்கங்களிலிருந்து முற்றாக வெளிவர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.