-
நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
கடந்த 2006-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தரைவழிபோக்குவரத்து சட்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, 373 சுங்கச்சாவடிகள் நாடு முழுவதும் செயல்பட்டுவருகின்றன. இதன்மூலம் ஆண்டிற்கு சுமார் 14,500 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக மத்திய அரசு கூறுகின்றது. ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் தேதி மற்றும் செப்டம்பர் முதல் தேதியிலும் என இரண்டு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுகின்றது.
கடந்த 2014-ம் ஆண்டில் ஒப்பந்தம் நிறைவுபெற்று நாடு முழுவதும் உள்ள சுமார் 100 சுங்கச்சாவடிகளை அகற்றாமல் – அவை இன்றுவரை கட்டண வசூலில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.
கடந்த 2014-ம் ஆண்டு இந்திய மேலாண்மை கழகம் (ஐ.ஐ.எம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுங்கச்சாவடிகளில் பல நாட்களாக நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் நிற்பதால் ஆண்டிற்கு சுமார் 60 ஆயிரம் கோடி எரிபொருள் வீணாவதுடன், சுமார் 27 ஆயிரம் கோடி மதிப்பிலான மனித உழைப்பு விரையமாகின்றது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு பொதுமக்களையும் – வியாபாரிகளையும் கடுமையாக பாதிக்கும் அனைத்து சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும். அதன் முதல்படியாக தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லக்கூடிய வணிக ரீதியிலான கனரக வாகனங்களுக்கு மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கவேண்டும். இதன் தொடக்கமாக நாளை முதல் அமலுக்கு வரக்கூடிய கட்டண உயர்வை உடனடியாக திரும்ப்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.