-
ராஜீவ் கொலைவழக்கில் தண்டணை அனுபவிக்கும் ஏழு பேரின் விடுதலை குறித்து சாதகமான முடிவினை எடுக்கவேண்டும் - மத்திய அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் ,பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறேன்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள்தண்டனையாக குறைத்து கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அவர்கள் அனைவரையும் விடுதலைசெய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்றளவும் விசரானைக்கு வரவில்லை. இதனை கருத்தில் கொண்டு கடந்த 2014-ம் ஆண்டும் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த வழக்கை மத்திய குற்ற புலனாய்வு அமைப்பு விசாரித்த காரணத்தினால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 435-வது பிரிவின்படி தமிழக அரசின் இந்த முடிவு குறித்து மத்திய அரசு தனது கருத்தை தெரிவிக்க கடந்த 02.03.2016 அன்று தமிழக அரசு சார்பில் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை குறித்து இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த தெளிவான விளக்கமும் இல்லாத காரணத்தினாலும், ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் 24-ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்ட காரணத்தினாலும் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சாதகமான முடிவினை மத்திய அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.