Loading...

செய்திகள்

Nov 25, 2026
News Image

சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் கொலைச்சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்.. இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர்ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் படுகொலைகள் கவலையளிக்கின்றன... சட்டத்தின் மீதான அச்சம் குற்றவாளிகளிடம் இருக்க வேண்டுமே தவிர, உயிர் பாதுகாப்பு குறித்த அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது. வீரம் விளைந்த சிவகங்கை மண், வன்முறையின் களமாக மாறிவிடக் கூடாது... சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் கொலைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.. இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல் சிவகங்கை மாவட்டம், இடையமேலூர் அருகே இன்று காலை கடைவீதிக்குச் சென்ற மகேஸ்வரன் என்ற விவசாயி, மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. கொடிக்காடு கண்மாய் பகுதியில் இரட்டை இளைஞர்கள் படுகொலை, மேலமங்கலத்தில் இளைஞர் படுகொலை, மானாமதுரையில் ஓய்வுபெற்ற விடுதிக் காப்பாளர் கொலை, பாகனேரியில் மூதாட்டி படுகொலை எனத் தொடரும் சம்பவங்களின் வரிசையில், தற்போது விவசாயி மகேஸ்வரனின் உயிரும் பறிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இத்தகைய சம்பவங்கள் தனிப்பட்ட முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிகழ்ந்தாலும், பொதுவெளியில் மனித உயிர்கள் சர்வசாதாரணமாகப் பறிக்கப்படும் சூழல் உருவாவதை எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. குற்றச் சம்பவங்கள் நடைபெற்ற பின்னர் குற்றவாளிகளைக் கைது செய்வது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு குற்றங்கள் நிகழாமல் தடுப்பதும் முக்கியமானதாகும். சட்டத்தின் மீதான அச்சம் குற்றவாளிகளிடம் இருக்க வேண்டுமே தவிர, உயிர் பாதுகாப்பு குறித்த அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களின் பின்னணியையும், அதற்கான காரணங்களையும் தமிழக அரசு விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். காவல்துறையின் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதோடு, உளவுத்துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்தி, சட்டவிரோத ஆயுதப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், விவசாயி மகேஸ்வரன் படுகொலையில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்து, சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தருவதோடு, அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு கொலைச் சம்பவமும் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே சிதைக்கிறது என்பதை தமிழக அரசு உணர்ந்து, வீரம் விளைந்த சிவகங்கை மண், வன்முறையின் களமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி, சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் கொலைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன் டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News