Loading...

செய்திகள்

Nov 22, 2026
News Image

காசிமேடுமீனவர்களின் நியாயமான கோரிக்கைகளைத்தமிழக அரசு உடனடியாகநிறைவேற்ற வேண்டும்...     இந்திய ஜனநாயகக்கட்சித் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வேண்டுகோள்

காசிமேடு மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்... இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வேண்டுகோள் முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும், ஆந்திர காவல்துறையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை மீட்க வலியுறுத்தியும் காசிமேடு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது மிகுந்த கவலையளிக்கிறது. உயிரைப் பணயம் வைத்துக் கடலுக்குச் சென்று உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பையும், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால், மீனவர்கள் மட்டுமின்றி, மீன் விற்பனையாளர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் காசிமேடு மீன் சந்தைப்பகுதி வெறிச்சோடி காணப்படுவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன. எனவே, தமிழக அரசு உடனடியாக மீனவர் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையை வழங்குவதோடு, ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீடித்த மீன்பிடிப்பு, கடல் வளப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மாசுபாட்டால் பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் - உரிமைகளையும் பாதுகாத்தல் என்ற நோக்கத்தில், நேற்று (21.11.2026) அனுசரிக்கப்பட்ட உலக மீனவர் தினத்தில், மீனவர்கள் தங்களது உரிமைக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராடும் நிலை கவலையளிக்கிறது... மேலும், இயற்கைப் பேரிடர்களிலிருந்து மீனவர்களைப் பாதுகாக்க நவீன தகவல் தொடர்புச் சாதனங்கள், முன்னெச்சரிக்கை வசதிகள் மற்றும் கடல்சார் மீட்புக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மீனவர்களின் குடும்பங்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணத் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.. அன்புடன் டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News