இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சமவேலைக்கு - சமஊதியம் என்ற 16 ஆண்டுகால நியாயமான கோரிக்கையை முடிவுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் தமிழக அரசுக்கு IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வேண்டுகோள் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற நியாயமான நீண்டகால கோரிக்கையை முன்வைத்து, இதற்கு முன்னர் போராடியும், தற்போது தொடர்ந்து கோரிக்கையையும் வைத்து வருகின்றனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே மாதம் 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் குறைந்து சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவற்றில் பல ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டனர், பலர் வேறு பணிகளுக்கு மாறி விட்டனர். மீதம் 15,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்வதற்காக முந்தைய அரசு அமைத்த குழுவின் நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பும் நிலை இருப்பது வேதனை அளிக்கிறது. இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளமாக மத்திய அரசு ரூ.47600/- என நிர்ணயித்துள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் ரூ.41,300/- ம், கேரளாவில் ரூ.35,600/-ம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.31,040/-ம் நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே அடிப்படை ஊதியத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கின்றது. தமிழகத்தில் ஆசிரியர் பட்டயப் பயிற்சி, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட தகுதிகளைப் பெற்று, ஒரே பணியைச் செய்யும் இடைநிலை ஆசிரியர்களிடையே ஊதிய வேறுபாடு தொடர்வதாக அவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகளை உயர்த்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஆசிரியர் சமூகத்தின் ஊதிய முரண்பாட்டை மட்டும் ஆண்டுக்கணக்கில் தீர்க்காமல் காலம் தாழ்த்துவது எந்த வகையிலும் நியாயமல்ல. ஆசிரியர்கள் போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தது வரவேற்க்கதக்கதாக இருந்தாலும் அவர்களின் போராட்ட கோரிக்கை இன்றளவும் தீர்க்கப்படவில்லை. ஆசிரியர்களின் உழைப்பை மதிப்பது என்பது அவர்களை வார்த்தைகளால் பாராட்டுவது மட்டுமல்ல, அவர்களுக்குரிய நியாயமான ஊதியத்தையும் . உரிமையையும் உறுதி செய்வதும் முக்கியமாகும். எனவே, இதுபோன்ற ஊதிய முரண்பாடுகளைக் களைவது மட்டுமின்றி, இடைநிலை ஆசிரியர்களின், “சம வேலைக்கு சம ஊதியம்‘’ தொடர்பான நியாயமான நீண்டகால கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies