காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்களைக் குறைக்கவும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மறுஆய்வு செய்யவும் கோரும் முன்னாள் பிரதமர் தேவகௌடா அவர்களின் கருத்து ஏற்புடையதல்ல.. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.. கர்நாடகத்தில் முதல்வர், அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் எனப் பல்வேறு தரப்பினரும் மேகதாது அணை கட்டுவதற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தமிழக அரசும் சட்ட நடவடிக்கைகளோடு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும். இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல் மேகதாது அணைத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு முன்னாள் பிரதமர் தேவகௌடா கடிதம் எழுதியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருப்பது தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதிக்கும் செயலாகும். இத்தகைய கோரிக்கைகள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. பெங்களூருவின் குடிநீர்த் தேவையைக் காரணமாகக் காட்டி மேகதாது அணையைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையால், தமிழகத்தின் டெல்டா மாவட்ட விவசாயமும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதை உணர வேண்டும். கர்நாடகத்தில் முதல்வர், அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் எனப் பல்வேறு தரப்பினரும் மேகதாது அணை கட்டுவதற்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தமிழக அரசும் சட்ட நடவடிக்கைகளோடு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும். மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதில் தமிழகத்தின் அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒருமித்த கருத்துடன் இருப்பதை மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் வலுவாக உணர்த்த வேண்டும். அதற்காக, தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, பாரதப் பிரதமர் அவர்களை நேரில் சந்தித்து, மேகதாது அணைத் திட்டத்திற்கு எக்காரணம் கொண்டும் ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்குரிய காவிரி நீர் உரிய காலத்தில் கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies