தேசிய சராசரியைவிட தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகம் என வரும் தகவல் கவலையளிக்கிறது ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்... இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்... மத்திய அரசு வெளியிட்டுள்ள அக்டோபர் மாதப் பணவீக்கப் புள்ளி விவரங்களின்படி, இந்திய அளவில் விலைவாசி உயர்வு 6.09 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 7.29 சதவீதமாக உயர்ந்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 1.20 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகமாகப் பணவீக்கம் பதிவாகியிருப்பது, மக்களின் பொருளாதாரச் சுமை குறித்து உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. குறிப்பாக, தமிழகத்தின் கிராமப்புறங்களில் பணவீக்கம் 7.86 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 6.84 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகளை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மின்கட்டணம், போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளால் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் மக்களுக்கு, இந்த விலைவாசி உயர்வு மேலும் சுமையாக அமைந்துள்ளது. தேசிய சராசரியைவிட தமிழகத்தில் விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதற்கான காரணங்களைத் தமிழக அரசு விரிவாக ஆய்வு செய்து, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்புச் செயல் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் பதுக்கல் மற்றும் செயற்கைத் தட்டுப்பாட்டைத் தடுக்கவும், பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்தவும், விவசாயிகளுக்கு நியாயமான விலையும் - பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்களும் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.. அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies