Loading...

செய்திகள்

Dec 28, 2025
News Image

14 ஆண்டுகளாக அறவழியையும் – அரசையும் நம்பி போராடிவரும் 12,000 பகுதி நேர சிறப்பாசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வழிவகை செய்யவேண்டும் தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி விலகி விட்ட நிலையில், சுமார் 12,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். பணி நிலைப்பு வேண்டி 14 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் இன்று வரை ஏற்கப்படவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 191 & 192 -ஆம் வாக்குறுதியாகவும் - பின்னர், திமுக ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என 2021 – ஆம் ஆண்டு திமுகவின் தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதியாகவும் அளிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இன்று வரையிலும் அப்பாவி பகுதி நேர ஆசிரியர்களின் அறவழி போராட்டங்கள் தொடர்கிறதே தவிர அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. குறைவான சம்பளம் என்றாலும் மாணவர்களின் நலனுக்காக நம்பிக்கையுடன் இன்று வரையிலும் போராடிவரும் இவர்களில் பலர் அவர்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே பணி ஓய்வு பெற்று மனச்சோர்வுடன் ஏமாற்றத்தை எதிர்கொள்கின்றனர். அறவழியையும் – அரசாங்கத்தையும் நம்பி, 14 ஆண்டுகளாக போராடி வரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்துவதோடு, பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் பணி நிலைப்பு கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு ஏற்க வேண்டும் என, 29-ஆம் தேதி அவர்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தைத் தவிர்க்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.. அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News