Loading...

செய்திகள்

Dec 19, 2025
News Image

திருப்பூர் மாநகர் குப்பை பிரச்சனைக்கு பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு உரிய உடனடி தீர்வு காணவேண்டும் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து வலியுறுத்தல்

திருப்பூரில் காலங்காலமாக நிலவும் குப்பை பிரச்சினையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மாணவர்கள், பணிக்குச் செல்லும் இளைஞர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் குப்பைப் பிரச்சனை தீவிரமாக உள்ளது. இதற்கு முன்பு, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகரின் வளர்ச்சியால் பாறைக்குழியைச் சுற்றியுள்ள பகுதிகள் வீடுகளாக மாறிவிட்ட நிலையில், அங்கு குப்பை கொட்டுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். முதலியபாளையம் அருகே உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டாலும், இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. குப்பை கொட்டும் இடங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதன் (நிலத்தடி நீர் மாசுபாடு, துர்நாற்றம்) காரணமாக பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பல மாதங்களாகப் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண போராடி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை இடுவாய் ஊராட்சியின் சின்னக்காளிபாளையத்தில் கொட்டுவதற்கு சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சின்னக்காளிபாளையத்தில் குப்பை கொட்டச் சென்ற லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. குறிப்பாக பொதுமக்கள் குப்பைக் கொட்டுவதை நிரந்தரமாகத் தடை செய்து, உறுதியான மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே திருப்பூர் மாநகரில் நிலவும் குப்பை பிரச்சினைக்கு மக்கள் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடி தீர்வு எடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்கிறேன் அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News