இன்று காலை கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் செல்லும்போது, ரயில்வே கேட்டைக்கடக்க முயன்ற பள்ளி வேன் மீது மோதியதால், மிகக்கோர விபத்து நடந்து பள்ளிக்குழந்தைகள் மூவர் உயிரிழந்தும், மற்றவர்கள் படுகாயமடைந்தும் உள்ள செய்தியறிந்து தாங்ககொணா துயரமும் வேதனையும் அடைந்தேன். ரயில்வே கேட்கீப்பரின் அலட்சியத்தால் நடந்த இக்கோர விபத்தால் அப்பாவி பள்ளிக்குழந்தைகளின் இறப்பு பெற்றோர்களுக்கும் - சமூகத்திற்கும் பேரிழப்பாகும். ஒவ்வொரு துயர சம்பவத்திலிருந்தும் – விபத்திலிருந்தும் நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்கின்றோம். சரியான சாலை விதிகளை பின்பற்றாமல் அவசரமாக செல்லவேண்டும் என்ற நோக்கில் நடந்த இத்தவறால், மூன்று இளம் குழந்தைகளை இழந்திருப்பது மிகப்பெரும் துயரமாகும். எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே பகுதிகளிலும் தமிழ் தெரிந்த கேட்கீப்பர்களையே பணியமர்த்துவது அவசியமாகும். இத்துயர சம்பவத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் என் சார்பிலும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் – வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies