தமிழக அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி விலகி விட்ட நிலையில், சுமார் 12,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதே ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் அலுவலகப் பணியாளர்களும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் முதல் 15% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. பணி நிலைப்பு வேண்டி 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதியாக அளிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தான் பகுதி நேர ஆசிரியர்கள் கோருகின்றனர். அதை நிறைவேற்ற தமிழக அரசு தயங்குவது ஏன்? ஆசிரியர் பணியே அறப்பணி என்ற வகையில் செயல்படும் ஆசிரியர்களையே நம்ப வைத்து ஏமாற்றுவது சரியா..?? இது அறமல்ல பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து அநீதி மட்டும் தான் இழைக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்விதரத்தை உயர்த்துவதே எங்களின் முதன்மை நோக்கம் என்று கூறிவரும் தமிழக அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏன் கேட்க மறுக்கிறது என்று புரியவில்லை. 12 ஆண்டுகளாக போராடி வரும் இவர்களுக்கு தமிழக அரசு செவிசாய்க்காமால் காலமுறை ஊதியத்துடன் நிலைப்பு செய்ய முடியாது என்ற வகையில் செய்லபட்டுக் கொண்டிருப்பதை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கண்டிப்பதோடு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். மேலும், பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிலைப்பு கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு ஏற்க வேண்டும். அவர்கள் வரும் 8-ஆம் தேதி நடத்தவிருக்கும் சிறை நிரப்பும் போராட்டத்தை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும், எனது சார்பிலும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றேன்.. அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies