• ‘அஹிம்சை’ எனும் அறவழியில் உறுதியாக நின்று போராடி இந்திய சுதந்திரத்திற்கு வித்திட்டவர் ‘மகாத்மா’ - டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் காந்தி ஜெயந்தி வாழ்த்து -

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் தேதி நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் மகாத்மா காந்தி நினைவு கூறப்படுகிறார். சுதந்திர இந்தியாவின் “தேசத்தந்தை” என அன்போடு அழைக்கப்படும்
    ‘மகாத்மா காந்தியடிகள்’ உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராவார்.  ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தை ‘அஹிம்சை’ எனும் அறவழியில் உறுதியாக நின்று போராடி சுதந்திரமடையச் செய்ததில் அளப்பறியப் பங்காற்றியவர்.

    அவர்  தன் வாழ்வில் சத்தியம் - நேர்மை - அகிம்சை ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர். மனிதநேயத்தின் அடையாளமாக  திகழ்ந்தவர் மகாத்மா காந்தியடிகள். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும். மகாத்மாவின் 154-வது பிறந்த நாளில் (02.10.2023) அவரின் புகழைக் கொண்டாடுவதோடு, அவர் காட்டிய சத்தியத்தின் வழி பின்பற்றி நடக்க உறுதியேற்போம் எனக்கூறி, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் காந்திஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.