• பகுதிநேர ஆசிரியப் பெருமக்களின் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்குக்கொண்டு வந்த தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் பாராட்டு

    கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில், 16,549 ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்  திறன் கல்வி  போன்ற கல்வி இணைச்செயல்பாட்டு பாடங்களில்,  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிய நியமிக்கப்பட்டனர்.

    கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது  ஆனால் இன்றுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்தும், பணிநியமனம் செய்யவில்லை. தொகுப்பூதியம் ஒழித்து காலமுறை சம்பளம் வழங்கி தமிழக முதல்வர் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பள்ளி கல்வி இயக்குனரகத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஆசிரிய பெருமக்கள் கடந்த 22–ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற உண்ணாநிலை அறவழிப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள். அவர்களின் கோரிக்கைகள் நியாயமாகப்பட்டதால், செவ்வாய்கிழமை (23.05.2023) அன்று இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் நேரில் சென்று ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டது.

    எங்களின் ஆதரவு நிலைப்பாட்டினை ஏற்று, தமிழக அரசு பகுதிநேர ஆசிரிய பெருமக்களுக்கு மூவர்குழு அமைத்து நல்லதொரு தீர்வை வழங்கவுள்ளதாகவும் – இரண்டு மாதங்களுக்கு ஊதியம் கொடுப்பதாகவும் சொல்லிக்கொண்டதற்கிணங்க, ஆசிரிய பெருந்தகைகளும் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர் என்பதை அறிந்து மிக்க மனமகிழ்ச்சியுற்றேன். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த எங்களின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொண்டு, உண்ணாவிரதத்தை முடிவுக்குக்கொண்டு வந்த தமிழக அரசுக்கு என்னுடைய பாராட்டுதலை தெரிவித்துக்கொள்வதோடு, தமிழக அரசு அறிவித்தபடி, துரிதமாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

     

     

     

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் MP

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி

    நிறுவனர் - இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)