• ஜிசாட் - 19 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம் இந்திய விண்வெளித்துறைக்கு மாபெரும் மகுடம் சூட்டப்பட்டுள்ளது - டாக்டர் பாரிவேந்தர் புகழாரம்

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவாண் விண்வெளி மையத்தில் இருந்து இதுவரை பல்வேறு செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பல அரிய – பெரிய சாதனைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. எனினும், நேற்று நிகழ்த்தப்பட்ட சாதனையின் மூலம், இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்துள்ளனர்.

    இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய வளர்ந்த வல்லரசு நாடுகள் மட்டுமே கிரையோ ஜெனிக் இன்ஜின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வந்தன. இந்நாடுகளின் விண்வெளி தொழில் நுட்பத்திற்கு இணையாக 4டன் வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைகோள்களை, உள்நாட்டிலேயே தயாரித்து – விண்ணில் செலுத்த முடியும் என்கிற சாதனையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ நிகழ்த்திக் காட்டியுள்ளது. இது நம் நாட்டு விண்வெளி ஆய்வுத்துறையில், குறிப்பாக ஜிசாட்-19 செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் மூலம், செயற்கைகோள்கள் பயன்பாட்டுத்துறைக்கு மாபெரும் மகுடம் சூட்டப்பட்டுள்ளது.

    இனிமேல், 4 டன் வரையிலான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை. இதனால் கோடிக்கணக்கான அன்னிய செலாவணி மீதமாவதுடன், வர்த்தக ரீதியில் இது பயன்பாட்டிற்கு வரும் பொழுது நமக்கான வருவாயும் உயரும் என நம்பலாம். இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, குறிப்பாக ஜி.எல்எல்வி மார்க்-3 திட்ட இயக்குனர் திரு.அய்யப்பன், ஜிசாட்-19 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனர் திரு. தபன்மிஸ்ரா ஆகியோருக்கும் – அவருடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள் அனைவருக்கும் என் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.