• புதுக்கவிதை வடிவின் சிற்பியாக விளங்கியவர் கவிக்கோ அப்துல் ரகுமான் - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    தமிழக இலக்கிய உலகில், குறிப்பாக கவிதை உலகில் – கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, முன்னோடி ஆளுமையாக திகழ்ந்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள். அவரின் மரணம் குறித்த செய்தி அறிந்ததும் மிகுந்த வருத்தமுற்றேன்.

    1970-களில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கவிதை குறித்த புதிய சிந்தனையும், அதன் வரிவடிவம் – உள்ளடக்கம் பற்றிய நவீன உத்திகளும் உதித்த கால கட்டத்தில் அவர்களின் வழிகாட்டியாய் விளங்கியவர் கவிக்கோ அப்துல்ரகுமான். ‘வானம்பாடி’ இலக்கிய வட்டம் என்கிற பெயரில், கவிதை வானில் சிறகடித்த இளம் கவிஞர்களுக்கு - வேடந்தாங்கலாய் விளங்கி, ஹைக்கூ, கஜல் போன்ற பிறமொழிக் கவிதை வடிவங்களையும் தமிழிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவராக திகழ்ந்தார்.

    1938-ம் ஆண்டு மதுரையில் பிறந்த கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள், வாணியம்படி இஸ்லாமியக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார். 1999-ல் சாகித்ய அகடாமி விருது, 2009-2011-ல் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் பதவி போன்ற பொறுப்புகளையும் வகித்து திறம்பட செயலாற்றினார். புதுக்கவிதை வடிவின் சிற்பிகளில் ஒருவராக விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமானின் இறப்பு – தமிழ் இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பு என்பதில் ஐயமில்லை. அவரின் குடும்பத்தினருக்கும், அவரை நேசிக்கும் இலக்கிய அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.