• நாளை (28.03.2017) தஞ்சையில் நடைபெறும் காவிரித்தாய் காப்பு தொடர்முற்றுகை போராட்டத்தில் ஐஜேகே தோழர்கள் கலந்துகொள்வார்கள் - IJK தலைவர் ரவிபச்சமுத்து அறிவிப்பு

  கடந்த பல ஆண்டுகளாகவே காவிரி பாசன பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு இன்னல்களையும் - இடற்பாடுகளையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இவ்வாண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் விவசாயம் நலிவடைந்துள்ளது. மேலும், காவிரி படுகை பகுதிகளில்  மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதனை அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் மிக கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த திட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது.

  காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்த நிலையில், மீண்டும் அவர்களுக்கு ஒரு பேரிடியாக ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தினை செயல்படுத்தவிருப்பதாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிவித்தது. இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின்படி தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் - கோட்டைக்காடு – நல்லாண்டார்கொல்லை ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆயத்தபணிகள் மேற்கொள்ளப்பட்டன.

  இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்,விவசாய அமைப்புகளும் முற்றுகை போராட்டம் நடத்தியும் உண்ணாவிரதம் இருந்தும், அமைதி வழியில் ஓரிடத்தில் மக்கள் ஒன்றுகூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அதனை அடுத்து மத்திய அரசு இத்திட்டத்தினை நிறுத்தி வைப்பதாக வாய்மொழியாக உறுதியளித்தது. எனினும் இத்திட்டத்தை செயல்படுத்த மீண்டும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என கூறப்படுகிறது.எக்காரணம் கொண்டும் எந்த வடிவிலும், இந்த திட்டத்தினை மீண்டும் அமல்படுத்தக்கூடாது என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கையாகும்.

  கடந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிகக் கொடூரமாக வீசிய வர்தா புயலாலும், இந்த நூற்றாண்டு சந்தித்திராத அளவிற்கு மழை பொய்த்துப்போனதாலும், ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்கும் நோக்கில்,தமிழக அரசு 39 ஆயிரத்து 565 கோடி ரூபாய் நிவாரண உதவியினை மத்திய அரசிடம் கோரியிருந்தது. ஆனால் 1748 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளது. விவசாயிகளின் துயர் துடைக்க மத்திய அரசு வழங்கிய இந்த நிவாரண நிதி போதுமானதல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

  இந்நிலையில், காவிரி தீர்ப்பாயத்தைக் கலைக்கக்கூடாது எனவும்,உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும், காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை எதிர்த்தும், வறட்சி பாதித்த விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.25 ஆயிரமும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (28.03.2017) காலை 10.00 மணி முதல் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரித்தாய் காப்புத் தொடர் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல் கோவை – திருப்பூர் - ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதும், விவசாய பாசனத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்குவதுமான பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, வரும் 30-ம் தேதி கோவை காந்தி பூங்காவில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரங்களை வலியுறுத்தி நடைபெறவுள்ள இந்த இரண்டு போராட்டங்களிலும் இந்திய ஜனநாயக கட்சியைச் சார்ந்த அனைத்து தோழர்களும் மகளிரணி – இளைஞரணி – மாணவரணி – வேந்தர்பேரவை உள்ளிட்ட பல்வேறு துணை அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு விவசாய பெருமக்களின் கோரிக்கைகள்  வெற்றி பெற உறுதுணையாய் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.