• ஓ பி எஸ் அவர்களின் அறப்போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக கட்சி அரணாக நிற்கும் IJK தலைவர் ரவிபச்சமுத்து ஆதரவு

    ஒரு கட்சியின் தலைமைக்கும் - அது உருவாக்கிய ஆட்சிக்கும் எள் முனையளவும் அவப்பெயர் வந்துவிடக்கூடாது என சத்தியத்தின் காவலராய் நின்று இதுவரை பொறுமை காத்து வந்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு முதலில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மௌனம் எவ்வளவு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதனையும் - மக்கள் சக்தி எவ்வளவு பெரிய ஆற்றல் வாய்ந்த உந்து சக்தி என்பதனையும் திரு. ஓபிஎஸ் அவர்கள் நிரூபித்திருக்கிறார்.

    தமிழக அரசியல் கலாச்சாரம் கடந்த 40 ஆண்டுகளாக தனிநபர் ஆலாபனையில் சிக்கிக்கிடக்கின்றது. 1952க்கு அப்புறம் பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தவிர, ஏனைய முதல்வர்கள் எல்லாம் தேவதூதர்களைப்போல் காட்சிப்படுத்தப்பட்டார்கள். இதுபோன்ற மாய சூழலை உடைத்தெறிந்து,  மக்களோடு மக்களாக கைகோர்த்து, எளிமையின் வடிவமாக ஆட்சி செய்தவர் திரு.ஓபிஎஸ் அவர்கள்.

    எதிர்க்கட்சிகளை எல்லாம் எதிரிக்கட்சிகளாக பார்த்துவந்த தமிழக அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளுக்கும் உரிய மரியாதை அளித்து - சட்டமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஜனநாயகத்தின் தூய நறுமணத்தை பரப்பச் செய்தவர் திரு. ஓபிஎஸ் அவர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சம்பாதித்த ஒரே செல்வம், திரு. பன்னீர்செல்வம் தான் என வரலாறு பேசும்.

    ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் அருகே நின்று அவர் கொட்டிய வார்த்தைகள் நடுநிலையாளர்களின் மனசாட்சியை உலுக்கிவிட்டது. ‘தான் தாழ்வுற்றாலும் பரவாயில்லை, தமிழகத்தைக்காக்க தனி ஒருவனாக நின்று போராடுவேன்’ என சூளுறைத்த அவரின் அறப்போராட்டத்திற்கு, இந்திய ஜனநாயக கட்சி அரணாக நிற்கும். ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு அணையாமல் காக்கும் கடமையில், ஐஜேகே தோழர்களும் - தொண்டர்களும் உறுதுணையாய் நிற்பார்கள் என்பதனை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.