• திருச்சி தோட்டா தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு -டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

  திருச்சி – சேலம் நெடுஞ்சாலையிலுள்ள முருங்கப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வெடிமருந்து கிடங்கும் – மற்றும்  பாறையை பிளக்கும் தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஏறக்குறைய 22-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாகவும், பழி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற செய்தி மிகுந்த வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. 

  ஏற்கனவே இந்த ஆண்டு சிவகாசி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஏறக்குறையை 10-க்கு மேற்பட்டோர் இறந்த துயரம் மறைவதற்குள் இன்று ஏற்ப்பட்டுள்ள  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் – வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

  இந்த தொழிற்சாலை ஏறக்குறைய 22 ஆண்டுகளாக இப்பகுதியில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

  இந்த தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லாததாலும் – சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீருக்கு அதிக மாசு ஏற்படுத்துவதாலும் இத்தொழிற்சாலையை உடனடியாக மூடவேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடிய போதிலும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாததின் விளைவுதான் இக்கோரவிபத்திற்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்திருப்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

  ஆய்வின்மூலம் வெடிமருந்து தொழிற்சாலைகள் – ஆண்டுதோறும் தங்களின் உரிமத்தை புதுப்பிப்பதுடன் மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் நீர்வள அமைச்சகத்தின் முழு அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பது சட்டவிதியாக உள்ளது. ஆனாலும் இப்பகுதிவாசிகள் தொடர்ச்சியாக போராடியும், அதனை அதிகாரிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை…? என்கின்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகின்றது.

  இதுபோன்ற கோர வெடிவிபத்து எதிர்காலத்தில் ஏற்படாமலிருக்க வெடித்து சிதறிய தொழிற்சாலையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்களை கடுமையாக தண்டிப்பதுடன், தமிழகம் முழுவதும் உள்ள வெடிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளை முழு ஆய்வுக்கு உட்படுத்தி சான்றிதழ் வழங்கவேண்டும்.

  மேலும் இவ்வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் உரிய இழப்பீடும் – அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும் வழங்குவதுடன் – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டியிருப்போருக்கு உரிய – உயரிய மருத்துவ சிகிச்சை உடனே வழங்க வேண்டுமென இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.