• தமிழ் பேரகராதி மற்றும் கலைச்சொற்களை உருவாக்க துறைசார்ந்த வல்லுனர் குழுவை அமைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் கோரிக்கை

    மாநில செய்தி நிலைய நூலகத்தில் தமிழ்மொழி, இலக்கியம், வரலாறு, அரசியல், அறிவியல், ஆன்மீகம், தலைவர்களின் வாழ்க்கைவரலாற்று நூல்கள், சிறுவர்களுக்கான நூல்கள், ஆங்கில நூல்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் நூல்களை எளிதில் பொதுமக்கள் தேடி எடுத்து படிப்பதற்காக உயர்தொழில்நுட்பத்தில் நவீன மென்பொருளைக் கொண்டு கணினி மயமாக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பினை இந்திய ஜனநாயக கட்சி வரவேற்கின்றது.

    1940-ம் ஆண்டு தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்பகம் முதல் தமிழ் அகராதியை வெளியிட்டது. தமிழக அரசின் சார்பில் 1982-ம் ஆண்டு இரண்டாம் பதிப்பு பனிகள் தொடங்கி, அது இன்றுவரை நடைமுறையில் உள்ள நவீன தமிழ் சொற்களை தொகுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இவை அனைத்தையும் தொகுத்து நவீன புதிய தமிழ் பேரகராதியை உருவாக்க வேண்டும் என்பதுடன், 1957-ல் சட்டத்துறை சார்ந்த மொழி பெயர்ப்பு தொடங்கி - பின்னர் 1968-ம் ஆண்டு முதல் அதற்கான கலைச்சொற்கள் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.

    ஆனால் பல்வேறு காரணங்களால் தமிழ் அகராதி மற்றும் கலைச்சொற்கள் உருவாக்கத்தில் போதிய முன்னேற்றம் இல்லை என கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்களும், பொதுமக்களும் பயனடையும் விதத்தில் தமிழ் பேரகராதி மற்றும் கலைச்சொற்களை உருவாக்க, துறை சார்ந்த வல்லுனர்கள் குழுவை அமைத்து, இப்பனிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.