• ஆன்லைன் சூதாட்டங்களை முற்றிலும் ஒழிக்க கடுமையான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் - மத்திய - மாநில அரசுகளுக்கு டாக்டர் பாரிவேந்தர் எம்.பி கோரிக்கை

    ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் தகவல் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தும் பொதுமக்ககளை மையப்படுத்தியே அமைகின்றது. உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அதிகளவில் தகவல் தொழிற்நுட்ப புரட்சி ஏற்பட்டிருந்தாலும், அதற்கு நேர் எதிரான பாதிப்புக்களையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருவது மிகுந்த வேதனையளிக்கின்றது.

    சமீப காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் அதிகளவில் தங்கள் பொருளாதாரத்தை இழந்ததோடு, தற்கொலை – கொலை - கொள்ளை போன்ற குற்றங்கச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தகவல், தொழிற்நுட்ப ஆவண காப்பக அமைப்பு தெரிவிக்கின்றது. கடந்த கொரோனா காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    ஆன்லைன் சூதாட்டம் என்பது அறிவுசார்ந்த விளையாட்டல்ல; மாறாக குறைந்த காலத்தில் அதிக வருவாய் ஈட்டலாம் என மூளைச்சலவை செய்யும் சர்வதேச மாபீயா கும்பல்களின் சதி வலை. ஆன்லைன் சூதாட்டத்தில் ஒருபுறம் மனிதர்கள் விளையாடினாலும், மறுபுறம் அதிநவீன மென்பொருளால் வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள்தான் விளையாடுகின்றது என்பதை அப்பாவி மக்களால் அறிந்துகொள்ள முடியாது.

    கடந்த 2020-ம் ஆண்டு ஆன்லைன் ரம்மி, போக்கர், ஆன்லைன் லாட்டரி போன்ற விளையாட்டை தடைசெய்ய அப்போதைய தமிழக அரசு இயற்றிய சட்டத்தை  சென்னை உயர்நீதிமன்றம் ரத்துசெய்ததின் எதிர்வினையே, தற்போது ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்தொல்லை அதிகமாகி குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் கோர முடிவு தொடர்கின்றன.

    வயது வித்தியாசமின்றி சூதாட்ட தொழிற்நுட்பத்தில் தங்கள் வாழ்க்கையை இழக்கும் பொதுமக்களை மீட்க:

    உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டலோடு, ஆன்லைன் சூதாட்டத்தை முற்றாக ஒழித்து சைபர் குற்றங்களுக்கு எதிராக கடுமையான தேசகுற்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதுடன்; சமூக விரோத கும்பலால் ஆன்லைன் சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன மென்பொருளை செயலிழக்க செய்ய, எதிர் மென்பொருளை உருவாக்கி இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்கள் இல்லாத நிலையை விரைந்து உருவாக்க வேண்டும்.

    இன்று (10.06.2022) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆன்லைன் - ரம்மி ஆட்டத்தினால் ஏற்படும் விளைவுகளைக் கண்டறியவும் பாதிப்புகளை ஆராயவும் ஓய்வுபெற்ற நீதிபதி திரு.கே.சந்துரு தலைமையில் குழு அமைத்துள்ளதை வரவேற்கின்றோம். தகுந்த சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் காலதாமதமின்றி  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய, அவசர சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.

    அன்புடன்,

    டாக்டர் பாரிவேந்தர்  M.P

    பெரம்பலூர் நாடளுமன்றத் தொகுதி.