• ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் - பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி

    பொங்கல் விழா உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகும். உயிரினங்களின் இயக்கத்திற்கும் – வாழ்விற்கும் முக்கிய காரணியாக விளங்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், உழவர்கள் தங்களோடு இணைந்து விவசாயத்தை மேற்கொள்ள பாடுபடும் கால்நடைகளுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறும் நாள் தமிழர் திருநாளாகவும், பொங்கல் திருவிழாவாகவும், அறுவடை திருவிழாவாகவும் நான்கு நாட்கள் பண்டிகையாக தமிழ்மொழி பேசும் மக்களால் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    பிறருக்கு உணவு வழங்கி, தாம் உண்ண நினைக்கும் தொழிலான உழவுத்தொழில் உலகில் மற்ற தொழில்களைவிட மிகவும் மேன்மையானதாகும். மேலும், இத்திருநாளின் நிறைவாக மூத்தவர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் வாழ்த்து பெறும் உன்னதமான மரபு சார்ந்த விழாவாகவும் இப்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இயற்கையை போற்ற வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழவேண்டும் என்பது தான் பொங்கல் திருநாள் நமக்கு சொல்லும் செய்தியாகும். அதை மதித்து இயற்கையுடன் கலந்து வாழவும், இயற்கையை பாதுகாக்கவும் இத்திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். எனக்கூறி, மங்கலப் பொங்கல் திருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)