• நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களோ புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்புகளோ இல்லாத பட்ஜெட்தமிழக நிதிநிலை அறிக்கை குறித்து - டாக்டர் பாரிவேந்தர் M.P., கருத்து

    தமிழக சட்டப்பேரவையில் இன்று (14.02.2020) நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், 2020 – 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார்  இதில் வழக்கமான வரவு-செலவு கணக்குகளின்றி வேறெந்த புதிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

    பெரம்பலூரில் வெங்காய மையம் – கடலூரில் முந்திரி மையம் – ஈரோட்டில் மஞ்சள் மையம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பெருமளவில் சாகுபடி செய்யப்படும் சிறிய வெங்காயத்திற்கான சந்தையையும், குளிரூட்டப்பட்ட கிடங்குகளையும் அமைக்க வேண்டுமென கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நான் பேசியிருக்கிறேன். மாநில அரசும் இதை கவனத்தில் கொள்ளவேண்டுமென அறிக்கைகள் வாயிலாகவும் வலியுறுத்தினேன். அதன்படி இந்நிதிநிலை அறிக்கையில், பெரம்பலூரில் வெங்காய மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை வரவேற்கின்றேன். இதேபோல், வாழை பயிர்களுக்கும் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என அரசின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

    வேலை வாய்ப்பின்மையை போக்குவதற்காக எந்த அறிவிப்பும் இந்நிதிநிலை அறிக்கையில் இல்லை. தமிழகத்தில் 2.90 லட்சம் பொறியியல் படிப்பிற்கான இடங்கள்  இருந்தபோதிலும், சுமார் 1.5 லட்சம் இடங்களுக்கு மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த அளவிற்கு பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறையக் காரணம், போதிய வேலைவாய்ப்பு இல்லாததுதான். இதனை கருத்தில் கொண்டு, சிறு-குறு தொழில்களுக்கான மானியங்களை உயர்த்தியும், பெருந்தொழில் விரிவாக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் மாநில அரசு உறுதுணையாக இருக்கவேண்டும். இதன்மூலம் அரசுக்கு நிரந்தர வருவாய் கிடைப்பதுடன், வேலையில்லா திண்டாட்டத்திற்கும் தீர்வு காணப்படும். ஆனால், இந்நிதிநிலை அறிக்கையில் இதற்கான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. மொத்தத்தில் நீண்ட  கால வளர்ச்சித் திட்டங்களோ – புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்புகளோ இல்லாத சாதாரண கணக்கு வழக்காகவே இந்த பட்ஜெட் உள்ளது.