• தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த நீதிபதிகளில் ஒருவராக விளங்கி, தமிழகத்தின் சட்டத்துறைக்கு மாபெரும் பெருமையைத் தேடித்தந்தவர் மறைந்த நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள்.

    சட்ட நிபுணராக மாத்திரம் அல்லாமல், சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்தவர் நீதியரசர் மோகன் அவர்கள். பல்வேறு வழக்குகளில் தமிழையும் - ஆங்கிலத்தையும் கையாண்டு,  தீர்ப்புகளை எழுதிய முறை மிகச்சிறந்த இலக்கியவாதியாக அவரை முன்னிலைப்படுத்தியது. 

    தமிழக அரசின் வழக்கறிஞராகவும் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் - உச்சநீதிமன்ற நீதியரசராகவும் பொறுப்புகளை வகித்த காலத்தில்,  சாதாரண – சாமானிய மக்களின் குரலாக நீதிமன்றங்களில் ஒலித்தவர்.

    அவரின் மறைவு தமிழகத்திற்கும் - தமிழ் உணர்வாளர்களுக்கும் ஓர் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், அவர் மீது பற்றுகொண்டவர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.