• அஞ்சல் வழித்தேர்வுகள் தமிழில் நடத்த அனுமதி - மத்திய அரசின் அறிவிப்பிற்கு டாக்டர் பாரிவேந்தர் M.P வரவேற்பு

    கடந்த 14-ஆம் தேதி நாடு முழுவதும் மத்திய அரசின் அஞ்சல் துறை சார்பில், தபால் அலுவலர் மற்றும் தபால் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இருந்தது. இதனால் இந்தி பேசாத குறிப்பாக தமிழகத்தைச் சார்ந்த பல ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.

    அஞ்சல் துறையில் இளநிலைப் பணிகளில் கிராமப்பகுதிகளில் பணியாற்றுவதற்காக நடத்தப்பட்ட தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இருந்ததை திரும்பப்பெற வேண்டும் எனவும், ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வினை ரத்துசெய்ய வேண்டும் எனவும், பொதுமக்களிடம் இருந்தும் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. மேலும், இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் வழக்கு தொடுக்கப்பட்டது.

     இந்நிலையில், இன்று (16.07.2019) மாநிலங்களவையில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தமிழகத்தைச் சார்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கடந்த ஜூலை 14-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு ரத்துசெய்யப்பட்டு,  மீண்டும் தேர்வு நடத்தப்படும் எனவும், அத்தேர்வில் வழங்கப்படும் வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளோடு, அனைத்து மாநில மொழிகளிலும் வழங்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் திரு.ரவிசங்கர் பிரசாத் அவர்கள் பதிலளித்தார். இதன்மூலம் மீண்டும் நடைபெறவுள்ள அஞ்சல்துறைத் தேர்வில், தமிழ் மொழியிலும் வினாத்தாள்கள் வழங்கப்படும் என்பது உறுதியாகின்றது.

    இம்முடிவினை இந்திய ஜனநாயகக் கட்சி வரவேற்பதுடன், இனி வரும் காலங்களில் தேவையற்ற வகையில் இதுபோன்ற மொழிப் பிரச்சனைகளை மத்திய அரசு ஊக்குவிக்கக்கூடாதென கேட்டுக்கொள்கின்றேன்.