• ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் - மகளிர் தின வாழ்த்துச் செய்தி

  பெற்ற தாயை உற்ற தெய்வமாக போற்றி வணங்கும் பண்பாடு பன்னெடுங்காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் நெறியாகும். உலகெங்கும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீக்கி, அவர்கள் அனைத்துத் துறைகளிலும் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் உரிமையும் பாதுகாப்பும் உள்ளவர்களாக வாழ்வதற்கு எண்ணற்ற கிளர்ச்சிகளைப் பெண்களே முன்நின்று நடத்தி; அதற்கான உரிமைகளைப் பெற்ற நாளை நாம் மகளிர் தினமாகக்  கொண்டாடி வருகின்றோம்.

  வீட்டின் நலத்திற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்களின் பங்களிப்பு ஆணுக்கு சரிநிகர் சமானமாய் உள்ளது. பெண்களை நம்மில் பாதியாக கருதி அவர்கள் அனைத்துத் துறைகளிலும் சுயமரியாதையுடன் முன்னேறிட கரம் கொடுப்பதும் கரம் கோர்ப்பதும் அனைவரது கடமையாகும். நம் வாழ்வுரிமை சார்ந்த போராட்ட களங்களில் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் பங்கேற்கிற நிலைமையை நாம் உருவாக்க வேண்டும்.

  கண்ணியத்தோடும், உரிமையோடும், பாதுகாப்போடும் பெண்கள் வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என இன்றைய மகளிர் தின நாளில் உறுதியேற்போம் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து மகளிருக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது மகளிர் தின வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  (ரவி பச்சமுத்து)

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)