• தன் உழைப்பாலும் செயல்பாடுகளாலும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தவர் திரு.வசந்தகுமார் அவர்கள்- டாக்டர் பாரிவேந்தர் M.P., இரங்கல்

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரு.வசந்தகுமார் அவர்கள் கன்னியாகுமரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நான் பெரம்பலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டேன். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஓராண்டு குறுகிய காலத்திலேயே என்னிடம் மிகுந்த அன்புடனும் - வாஞ்சையுடனும் பழகக்கூடியவராக விளங்கினார். எப்பொழுதும் தன் தொகுதி மக்களின் மேம்பாடு குறித்தே அதிகம் சிந்திக்கக்கூடியவராக விளங்கினார், மக்களவைத் தலைவரிடத்தில்  எப்படியாவது அனுமதி பெற்று, தன் தொகுதி பிரச்சனைகளை கேள்விகளாக்கி அவையின் கவனத்திற்கு கொண்டுவருவதில் வல்லராகத் திகழ்ந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவராகிய திரு. குமரி அனந்தன் அவர்களின் சகோதரர் என்கிற பின்புலத்தோடு அரசியலில் நுழைந்த திரு.வசந்தகுமார் அவர்கள், தன்னுடைய தனிப்பட்ட உழைப்பாலும் செயல்பாடுகளாலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தார். நல்ல மனியதேயம் மிக்கவராக விளங்கிய திரு.வசந்தகுமார் அவர்களை இழந்துவாடும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.